பெங்களூருவில் காபி வாரிய செயலாளர் சந்திரசேகரின் வீடு, அலுவலகங்கள் உட்பட 15 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர்.
ராஜஸ்தான், தெலங்கானா உட்பட 5 மாநில தேர்தல்கள் விரைவில் நடைபெற உள்ளது. இந்த மாநிலங்களில் நடைபெறும் தேர்தலில், பணப் பட்டுவாடாவை தடுக்க தேர்தல் ஆணையம் தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இதனிடைய வெளிமாநிலங்களில் உள்ள ராஜஸ்தான் மாநில தொழிலதிபர்கள், தங்கள் சொந்த மாநிலத்திற்கு தேர்தல் செலவுகளுக்காக பணத்தை அனுப்பலாம் என்கிற சந்தேகம் எழுந்துள்ளது. இது தொடர்பாக பாஜக உட்பட பல்வேறு அரசியல் கட்சியினரும் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை எழுப்பி வருகின்றனர்.
இதனிடையே கர்நாடக மாநிலம் பெங்களூரின் 15க்கும் மேற்பட்ட இடங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வருமானவரித் துறையினர் சோதனை நடத்தினர். வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக நகைக்கடை உரிமையாளர்களின் வீடு, அலுவலகங்கள், நகைக்கடைகள் ஆகியவற்றில் சோதனை நடைபெற்றிருந்தது. இந்த ஆவணங்களின் அடிப்படையில் நேற்று பெங்களூரு நகரின் 15க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறையினர் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்.
இதில் காபி வாரிய செயலாளரும், நகைக்கடை அதிபருமான சந்திரசேகரன் வீடு, நகை கடை ஆகியவையும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. காலை 6 மணிக்கு துவங்கிய சோதனை இரவு வரை நீடித்த நிலையில் சில முக்கிய ஆவணங்களை வருமானவரித்துறை அதிகாரிகள் பரிசீலித்ததாக கூறப்படுகிறது. இந்த சோதனைகள் காரணமாக தொழிலதிபர்கள் இடையே பரபரப்பு நிலவி வருகிறது.