நாக்பூர் விமானத்தில் பயணித்த பெண் ஒருவருக்கு, பாலியல் தொல்லை கொடுத்த இன்ஜினியரை போலீசார் கைது செய்தனர்
புனேயில் இருந்து நாக்பூர் நோக்கி சம்பவத்தன்று விமானம் ஒன்று சென்று கொண்டு இருந்தது. இந்த விமானத்தில் சந்திராப்பூரை சேர்ந்த 40 வயது பெண் ஒருவர், நாக்பூரில் தந்தையின் இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக சென்றார். அப்போது அந்த விமானத்தில் பயணித்த புனே கோந்த்வா பகுதியை சேர்ந்த இன்ஜினியர் பெரோஸ் ஷேக்(வயது32) என்பவர், அப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
நாக்பூர் விமான நிலையத்தில் தரையிறங்கிய பிறகும் அவர், அந்த பெண் பயணிக்கு தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதை கவனித்த தொழில் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் போலீசுக்கு தகவல் கொடுத்தார். இதனையடுத்து போலீசார் துரிதமாக செயல்பட்டு இன்ஜினியர் பெரோஸ் ஷேக்கை கைது செய்தனர். அவர் மீது பாலியல் தொல்லை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.