சென்னை பெரம்பூர் லோகோ ரயில் நிலையத்தில் பச்சையப்பன் மற்றும் மாநிலக் கல்லூரி மாணவர்கள், ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசி கொண்டு ஆக்ரோஷமாக மோதிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரக்கோணத்தில் இருந்து இன்று காலை 9.15 மணியளவில் பயணிகளுடன் மின்சார ரயில் ஒன்று சென்ட்ரல் நோக்கி வந்துக்கொண்டிருந்தது. இதில் ஏராளமான கல்லூரி மாணவர்களும் பயணம் செய்தனர். ரயில் பெரம்பூர் லோகோ ரயில் நிலையம் வந்தடைந்தபோது ரயிலில் பயணம் செய்த மாநிலக் கல்லூரி மாணவர்கள் சிலர் ரயிலில் இருந்து கீழே இறங்கி பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பயணம் செய்த ரயில் பெட்டி மீது கற்களை வீசி எறிந்தனர். பதிலுக்கு பச்சையப்பன் கல்லூரி மாணவர்களும் கற்களை வீசி எறிந்ததால் அந்த பகுதி போர்க்களமாக மாறியது.
சுமார் 40க்கும் மேற்பட்ட மாநில கல்லூரி மாணவர்கள் நடைப்பாதையில் ஓடிச் சென்று தொடர்ந்து கற்களை வீசி எறிந்ததால் பொதுமக்கள் மற்றும் ரயிலில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் அச்சமடைந்தனர். உடனே பயணிகள் சிலர் மின்சார ரயிலில் இருந்த கதவுகளை மூட முயற்சி செய்தனர். ஆனால் கதவுகளை மூட முடியாததால் ரயில் பெட்டிக்குள் சென்று ஒளிந்து கொண்டனர்.
இதில் கல்லூரி மாணவர்கள் சிலர் லேசாக காயங்களுடன் உயிர் தப்பினர். பயணிகள் அளித்த தகவலின் பேரில் அங்கு வந்த ரயில்வே போலீஸார் கலவரத்தில் ஈடுபட்ட மாணவர்களை பிடிக்க முயன்றபோது அனைவரும் அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.
பின்னர் இச்சம்பவம் தொடர்பாக பெரம்பூர் ரயில்வே போலீஸார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து மோதலில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்களை அடையாளம் காணும் பணியில் ஈடுப்பட்டு வருவதுடன் மோதலில் ஈடுப்பட்ட மாணவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர் .
கடந்த 5ம் தேதி கடற்கரை ரயில் நிலையத்தில் மாணவர்கள் ஒருவருக்கொருவர் வெட்டிக் கொண்ட சம்பவம் அடங்குவதற்குள் பெரம்பூர் லோகோ ரயில் நிலையத்தில் மீண்டும் மாணவர்கள் மோதிக்கொண்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
5 மாநில தேர்தல் தேதி அறிவிப்பு வந்தாச்சு... டிசம்பர் 3-ல் வாக்கு எண்ணிக்கை!
புதிய மதுக்கடைகள் திறக்கவேண்டும்... முதல்வருக்கு அழுத்தம் கொடுக்கும் எம்எல்ஏக்கள்!