சுற்றுலா வந்த இடத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை - புதுச்சேரியில் பரிதாபம்


புதுச்சேரி: சுற்றுலா வந்த திண்டுக்கல்லை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர், தங்கியிருந்த தனியார் விடுதி அறையிலேயே தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் சந்திரசேகர், அவரது மனைவி சரஸ்வதி (48) மகன் சுதர்சன், மகள் சௌந்தரியா ஆகியோருடன் கடந்த 7 ஆம் தேதி இரவு புதுச்சேரிக்கு சுற்றுலா வந்துள்ளனர். அவர்கள் நகர பகுதியான முத்துமாரியம்மன் கோயில் வீதியில் உள்ள தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளனர். இந்நிலையில் சுற்றுலாவை முடித்துக் கொண்டு இன்று அவர்கள் நான்கு பேரும் ஊருக்கு செல்வதாக இருந்தது. அறையில் இருந்து வெளியேறுவதற்கான நேரம் முடிந்த பின்னரும் அவர்கள் வெளியே வராமல் இருந்தால் தங்கும் விடுதி ஊழியர்கள் சென்று பார்த்துள்ளனர். ஆனால் அறை தாளிடப்பட்டிருந்தது. இதனால் சந்தேகமடைந்த விடுதி நிர்வாகத்தினர் காவல்துறைக்கு புகார் அளித்தனர்.

இதனால் மாற்று சாவி கொண்டு கதவை திறந்து பார்த்தபோது அவர்கள் நான்கு பேரும் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளனர். இதனை அடுத்து இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் அவர்கள் நான்கு பேரும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.

எதற்காக இவர்கள் தற்கொலை செய்து கொண்டனர் என்பது குறித்து இன்னும் தகவல் தெரியவில்லை. இது தொடர்பாக திண்டுக்கல் காவல் நிலையத்துக்கும், புதுச்சேரி போலீஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.

தற்கொலை தீர்வல்ல: தற்கொலை எந்தப் பிரச்சினையையும் தீர்க்காது. தற்கொலை எண்ணம் வந்தால் தற்கொலைத் தடுப்பு மையங்களைத் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம். வாழ்வதற்கு புது நம்பிக்கை பெற சினேகா தொண்டு நிறுவனத்தின் 044 - 24640060 ஹெல்ப்லைன் எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். தமிழக அரசின் ஹெல்ப்லைன் நம்பர் 104-க்கும் தொடர்புகொண்டு பேசலாம்.

x