நியூஸ்க்ளிக் ஆன்லைன் ஊடக வழக்கு விவகாரத்தில், அதில் பணியாற்றிய பெண் பத்திரிகையாளரை விசாரிக்க, டெல்லி போலீஸார் கேரளாவில் மையம் கொண்டுள்ளனர்.
நியூஸ்க்ளிக் என்ற ஆன்லைன் ஊடக தளம் இந்திய அரசுக்கு எதிரான பிரச்சாரங்களை மேற்கொள்வதாகவும், இதற்காக சீனாவிடமிருந்து ஆதாயம் பெற்றதாகவும் குற்றம்சாட்டி டெல்லி போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக நியூஸ்க்ளிக் ஊடக நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் மனிதவளத்துறை தலைவர் ஆகியோர் பயங்கரவாத குற்றச்சாட்டுகளின் கீழ் முன்னதாக கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு தொடர்பாக கேரளாவின் பத்தினம்திட்டாவில் வசித்துவரும் அனுஷா பால் என்பவரிடம் டெல்லி போலீஸார் நேற்று விசாரணை மேற்கொண்டனர். 2018 - 2022 இடையே நியூஸ்க்ளிக் ஊடக நிறுவனத்தில் பத்திரிகையாளராக அனுஷா பால் பணியாற்றி உள்ளார். தற்போது மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் தொடர்பான ஆய்வில் ஈடுபட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
பத்தினம்திட்டாவில் டெல்லி போலீஸாரின் விசாரணை குறித்து அனுஷாபால் இன்று (அக்.7) செய்தியாளர்களை சந்தித்து பேசினார். “ஒரு பெண் உட்பட 3 அதிகாரிகள் அடங்கிய குழுவினர் என்னிடம் விசாரணையில் ஈடுபட்டனர். நியூஸ்க்ளிக் நிறுவனத்தில் பணியாற்றியபோது எனக்கு அளிக்கப்பட்ட பணிகள் மற்றும் ஊதியத்துக்கான நிதியாதாரம் தொடர்பாக விசாரித்தார்கள்.
மேலும், சிபிஎம் கட்சியின் டெல்லி மாநிலச் செயலாளர் கே.எம். திவாரி குறித்தும், அவருடனான நியூஸ்க்ளிக் தொடர்புகள் குறித்தும் அதிகாரிகள் விசாரித்தனர்” என்று அப்போது அனுஷா பால் தெரிவித்தார். தனது லேப்டாப் மற்றும் செல்போன் உள்ளிட்டவற்றை டெல்லி போலீஸார் எடுத்துச் சென்றதாகவும் அனுஷா தெரிவித்துள்ளார். முன்னதாக டெல்லி போலீஸின் சிறப்பு பிரிவினர், அனுஷா பால் வீட்டை தீவிரமாக சோதனையிட்டனர்.
இதையும் வாசிக்கலாமே...