'வீட்டுக் கடன் கட்டவில்லை' என விளம்பரம்... அத்துமீறிய நிதி நிறுவனத்தால் குடும்பத்தார் அதிர்ச்சி!


தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் எழுதிய வாசகங்கள்

ஆண்டிபட்டி அருகே வாங்கிய கடனுக்கு தவணை செலுத்திய பிறகும், வீட்டுச் சுவற்றில் ’வீட்டு கடன் செலுத்தவில்லை’ என பெயின்டால் எழுதி வைத்துவிட்டு சென்ற தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் மீது புகார் அளிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள அன்னை இந்திரா நகர் காலனியில் வசித்து வருபவர் பிரபு. தனியார் நிறுவனத்தில் சமையலராக பணியாற்றி வரும் இவர், தனது சொந்த வீட்டை தேனியில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அடமானம் வைத்து 3 லட்சம் ரூபாய் கடன் பெற்றுள்ளார். வாங்கிய கடனுக்கு முறையாக தவணை செலுத்தி முடித்துவிட்டு, ஆவணங்களைத் திருப்பித் தரும்படி தனியார் நிறுவன அதிகாரிகளிடம் பிரபு கேட்டுள்ளார்.

அப்போது இன்னும் ஒன்றரை லட்ச ரூபாய் கடன் தொகை பாக்கி செலுத்த வேண்டியுள்ளதாகவும் அவற்றை செலுத்தி விட்டு ஆவணங்களை வாங்கி செல்லும்படியும் நிதி நிறுவன அதிகாரிகள் கூறியதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த பிரபு, ஆதங்கத்துடன் வீட்டிற்குத் திரும்பியுள்ளார்.

தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் எழுதிய வாசகங்கள்

பின்னர் வேலைக்காக பிரபு வெளியே சென்றிருந்த போது, அவரது வீட்டின் சுவற்றில் ’வீட்டுக் கடன் கட்டவில்லை’ என பெயின்டால் பெரிய எழுத்துக்களில் எழுதி வைத்துவிட்டு, வீட்டிலிருந்த பெண்கள் மற்றும் முதியவர்களை நிதிநிறுவன ஊழியர்கள் மிரட்டி விட்டுச் சென்றதாக கூறப்படுகிறது.

தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் எழுதிய வாசகங்கள்

இதனால் பெரும் அதிர்ச்சியும், அவமானமும் அடைந்த பிரபு, வாங்கிய கடனுக்கு பணம் செலுத்திய பின்பும் தன்னையும் தனது குடும்பத்தினரையும் மிரட்டிய தனியார் நிதி நிறுவனம் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி, கானா விலக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் தனது வீட்டு ஆவணங்களை மீட்டுத் தரக் கோரி, தேனி மாவட்ட காவல் துறை மற்றும் தமிழ்நாடு அரசிடமும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

x