கமிஷன் தராததால் ஆத்திரம்... புதிய சாலையை சேதப்படுத்திய பாஜக எம்எல்ஏவின் ஆதரவாளர்கள்!


சாலை அமைக்கும் பணி

உத்தரப்பிரதேசத்தில் சாலை அமைப்பதற்கு கமிஷன் வழங்காததால் எம்எல்ஏவின் ஆதரவாளர்கள் புதிதாக அமைக்கப்பட்ட சாலையைச் சேதப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோ அருகே உள்ள ஷாஜகான்பூர்-பட்வான் இடையே சமீபத்தில் சாலை அமைக்கப்பட்டது. இந்த பகுதியின் சட்டமன்ற உறுப்பினராக பாஜகவைச் சேர்ந்த விக்ரம்வீர் சிங் என்பவர் பதவி வகித்து வருகிறார். எம்எல்ஏவுக்கு நெருக்கமானவர் எனக்கூறி, ஜக்வீர் சிங் என்பவர், சாலை அமைத்த ஒப்பந்ததாரர்களை நேரில் சந்தித்து 5 சதவீத கமிஷன் வழங்க வேண்டும் என பலமுறை வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் இதற்கு ஒப்பந்ததாரர் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

சேதப்படுத்தப்பட்ட சாலை

இந்நிலையில் ஜக்வீர் சிங் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சிலர், புல்டோசர்களை எடுத்து வந்து ஏற்கெனவே அமைக்கப்பட்டு இருந்த புதிய சாலையை சேதப்படுத்திவிட்டு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஒப்பந்ததாரர் அளித்த புகாரின் பேரில் 20-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த விவகாரத்தில் தனக்கு எந்த தொடர்பும் இல்லை எனவும், ஜக்வீர் சிங் தனது ஆதரவாளர் அல்ல எனவும் எம்எல்ஏ விக்ரம்வீர் சிங் விளக்கமளித்துள்ளார்.

சாலை அமைக்கும் பணி (கோப்பு படம்)

இதனிடைய இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக திகார் துணை மண்டல நீதித்துறை நடுவர் தலைமையில் சிறப்பு படை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுப்பணி துறையும் இது தொடர்பாக அறிக்கை தயாரிக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. மீண்டும் அப்பகுதியில் தற்போது பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

x