காதல் திருமணம் கசந்தது: வரதட்சணை கேட்டு மனைவியின் குடும்பத்தை கொலை செய்த கணவன்


யாதகிரி: பேஸ்புக் மூலம் பழகி காதல் திருமணம் செய்த மனைவி மற்றும் மாமனார், மாமியார் ஆகியோரை குத்திக்கொலை செய்த வாலிபரை போலீஸார் தேடிவருகின்றனர்.

கர்நாடகா மாநிலம். யாதகிரி மாவட்டம், சைதாப்பூரைச் சேர்ந்தவர் நவீன்(30). இவருக்கு பேஸ்புக் மூலம் தாவண்கெரேவைச் சேர்ந்த அன்னபூர்ணா(25) என்பவர் பழக்கமானார். இந்த தொடர்பு அவர்களுக்குள் காதலாக மாறியது. இந்த நிலையில், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அன்னபூர்ணாவை நவீன் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார்.

இந்த நிலையில், ஓராண்டுக்குப் பிறகு வரதட்சணை கேட்டு அன்னபூர்ணாவை நவீன் மற்றும் அவரது குடும்பத்தினர் கொடுமைப்படுத்தத் தொடங்கினர். இதன் காரணமாக கணவன், மனைவிக்குள் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், தங்களது மகளை வரதட்சணை கேட்டு நவீன் மற்றும் அவரது குடும்பத்தினர் கொடுமைப்படுத்துவதாக அன்னபூர்ணாவின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இதனால் தனது மகளுடன், பெற்றோர் வீட்டிற்கு அன்னபூர்ணா சென்று விட்டார்.

இந்நிலையில், அன்னபூர்ணாவை சந்தித்த நவீன், நாம் சேர்ந்து வாழ்வோம் என்று கூறியுள்ளார். இதனை நம்பி, தங்களது மகளை கணவருடன் சேர்த்து வைக்க அன்னபூர்ணாவின் தந்தை பசவராஜப்பா(52), அவரது மனைவி கவிதா(45) ஆகியோர் நேற்று வந்திருந்தனர். அப்போது பிரச்சினையைப் பேசி முடித்தபின், பேருந்து நிறுத்ததில் இறக்கி விடுவதாக தனது மாமனார், மாமியாரை நவீன் அழைத்துள்ளார். இதனை நம்பி காரில் அவர்கள் சென்றனர். அவர்களுடன் அன்னபூர்ணாவும் சென்றுள்ளனர்.

இவர்களை காரில் அழைத்துச் சென்ற நவீன், திடீரென வண்டியை நிறுத்தியவர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மனைவி மற்றும் மாமனார், மாமியாரை சரமாரியாக குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் மூவரும் உயிரிழந்தனர். இதன்பின் அவர்களது உடல்களை ஜோலடடாகி கிராமத்தின் அருகே வீசி விட்டு நவீன் தலைமறைவானார்.

இக்கொலைகள் குறித்து தகவல் அறிந்த சைதாப்பூர் போலீஸார், விரைந்து வந்து மூவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் வழக்குப்பதிவு செய்து நவீனை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

x