உ.பியில் அடுத்த பயங்கரம்: லாரி மீது ஸ்லீப்பர் பேருந்து மோதி 2 பேர் பலி


ஹாத்ரஸ்: உத்தரப்பிரதேச மாநிலம் ஹாத்ரஸில் இன்று காலை லாரி மீது ஸ்லீப்பர் பேருந்து மோதியது. இந்த விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர், மேலும் 16 பேர் காயமடைந்தனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் ஹாத்ரஸில் உள்ள டோலி கிராமத்தின் தானா சிக்கந்தராவ் அருகே இன்று காலை டிரக் லாரி மீது ஸ்லீப்பர் பேருந்து மோதியது. இந்த விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர், மேலும் 16 பேர் காயமடைந்தனர். இந்த விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் ஹாத்ரஸ் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நிபுன் அகர்வால் மற்றும் காவல் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். விபத்தில் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பேருந்து ஓட்டுநரின் அலட்சியத்தால் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், காயமடைந்தவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளதாக முதல்வர் அலுவலகத்தின்(சிஎம்ஓ) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ்வில் இதேபோன்ற விபத்து நேற்று நடைபெற்றது. பீகார் மாநிலம் மோதிஹாரியில் இருந்து வந்த பேருந்து பால் டேங்கர் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 18 பேர் உயிரிழந்ததுடன் 19 பேர் படுகாயமடைந்தனர்.