ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்: சிபிசிஐடி அலுவலகத்தில் பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகரிடம் விசாரணை


சென்னை: மக்களவைத் தேர்தலின்போது தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் பாஜக மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் விசாரணைக்கு ஆஜராகியுள்ளார்.

அண்மையில் முடிவடைந்த மக்களவைத் தேர்தலில் திருநெல்வேலி தொகுதியில் பாஜக சார்பில் நயினார் நாகேந்திரன் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருந்தார். இந்நிலையில் கடந்த ஏப்ரல் 6ம் தேதி, தாம்பரம் ரயில் நிலையத்தில் நெல்லை விரைவு ரயிலில் நயினார் நாகேந்திரனின் ஊழியர்கள் 3 பேர், ரூ.4 கோடி பணத்துடன் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இந்தப் பணத்தை திருநெல்வேலி தொகுதியில் விநியோகிக்க திட்டமிட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் இந்த வழக்கை தற்போது சிபிசிஐடி விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் இதுவரை 15-க்கும் மேற்பட்டோருக்கு சம்மன் அனுப்பி நேரில் வரவழைத்து சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர்.

இந்நிலையில் நயினார் நாகேந்திரன், பாஜக அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம், பாஜக மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் ஆகிய 3 பேரையும் நேரில் அழைத்து விசாரணை நடத்த சிபிசிஐடி போலீஸார் சம்மன் அனுப்பியிருந்தனர். இந்த நடவடிக்கையை எதிர்த்து இவர்கள் மூவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கில் நேரில் ஆஜராக எஸ்.ஆர்.சேகருக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. இச்சூழலில் சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி தலைமை அலுவலகத்தில் பாஜக மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் இன்று நேரில் விசாரணைக்கு ஆஜரானார்.

அவருடன் அவரது வழக்கறிஞர்களும் உடன் வந்துள்ளனர். எஸ்.ஆர்.சேகரிடம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வரும் நிலையில், அடுத்தக்கட்டமாக நயினார் நாகேந்திரனுக்கு மீண்டும் சம்மன் அனுப்பி விசாரிக்க உள்ளதாக சிபிசிஐடி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.