கள்ளக்குறிச்சி : கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 66 ஆக உயர்வு!


கள்ளக்குறிச்சியில் கடந்த ஜூன் மாதம் 18ம் தேதி கள்ளச்சாராயம் குடித்து அடுத்தடுத்து உடல்நலன் பாதிக்கப்பட்டு பலரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தமிழகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரத்தில் பலி எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளது.

220 பேர் சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் அரசு மருத்துவமனைகள் மற்றும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர். இதில் 60க்கும் மேற்பட்டோர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இவர்களில் 90-க்கும் மேற்பட்டோர் உடல் நலன் சீரானதையடுத்து மருத்துவமனையில் இருந்து சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.

கள்ளச்சாராயத்தில் மெத்தனால் அதிகளவில் கலக்கப்பட்டதால், அது பலரது உயிர்களைக் காவு வாங்கியிருப்பது விசாரணையில் தெரிய வந்தது. இது தொடர்பாக இதுவரை 21 பேரைக் கைது செய்து சிபிசிஐடி போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 8 பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிவராமன் (42) என்பவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.