தமிழகத்தில் தொடரும் அதிர்ச்சி... வெறிநாய் கடித்து 6 பேர் படுகாயம்!


தமிழ்நாடு முழுவதும் கடந்த சில மாதங்களாக தெருநாய்களின் தொந்தரவு வெகுவாக அதிகரித்துள்ளது. சாலைகளில் சுற்றித் திரியும் தெருநாய்கள் அவ்வப்போது வெறி பிடித்து பொதுமக்களை கடித்து வைக்கும் சம்பவம் வாடிக்கையாக உள்ளது. வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக சாலைகளில் சுற்றித்திரியும் இந்த நாய்களால் விபத்துகளும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே நங்கவள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் இறைச்சி கடைகளில் இருந்து வீசப்படும் கழிவுகளை உண்பதற்காக ஏராளமான தெரு நாய்கள் சுற்றி திரிகின்றன. இந்த நாய்கள் அடிக்கடி சாலையில் சண்டையிட்டு, அவ்வழியே செல்வோரை துரத்திச் சென்று கடிப்பதுடன், சாலையில் குறுக்கே திரியும் போது விபத்தில் பலர் சிக்கி காயமடைகின்றனர்.

இந்நிலையில் இன்று காலை நாங்கவள்ளி, சப்பாணிப்பட்டியில் தங்கமணி (55) என்ற பெண்ணை தெருநாய் கடித்தது. இதேபோல் சின்னையன் (72), வெங்கடாஜலம் (70), அங்கப்பன்(75), காசி கவுண்டர்(55), இளையபாரதி (17) ஆகியோரையும் நாய் கடித்துக் குதறியது.

நாய் கடித்து கை, கால்களில் காயம் அடைந்த 6 பேரும் மேட்டூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த உள்ளாட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.