சாலையில் திடீரென தீப்பற்றி எரிந்த கார்; சிதறி ஓடிய மக்கள் - புதுச்சேரியில் பரபரப்பு!


புதுச்சேரி: நகரின் மையப்பகுதியில் சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

புதுச்சேரி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் கோவிந்த சாலை நகரைச் சேர்ந்த பிரபு என்பவர், புதுச்சேரி நகரப் பகுதியான 45 அடி ரோடு ரெயின்போ நகர் சாலைக்கு இன்று தனது காரில் வருகை தந்திருந்தார். கடை ஒன்றுக்கு செல்வதற்காக அவர் சாலையோரம் அந்த காரை நிறுத்திவிட்டு இறங்கிச் சென்றுள்ளார்.

சிறிது நேரத்தில் காரின் முன்பகுதியில் இருந்து புகை வருவதைக் கண்ட அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் இது தொடர்பாக பிரபுவிடம் தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால் பிரபு வந்து பார்ப்பதற்குள் முன் பகுதி முழுவதும் தீ கொழுந்து விட்டு எரியத் துவங்கியது. உடனடியாக இது குறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அதற்கு முன்பாகவே காரின் முன்பகுதி முழுவதும் எரிந்து நாசமானது.

இந்த தீ விபத்து காரணமாக அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்து காணப்பட்டதால், பெரும் பரபரப்பு நிலவியது. இதனால் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, வேறு பாதையில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டது. காரின் உள்ளே ஏற்பட்ட மின்கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.