சென்னை விமான நிலையத்தில் பாஸ்போர்ட் பரிசோதனையில் முறைகேடு - தலைமைக் காவலர் பணியிடை நீக்கம்


சென்னை: அண்ணா பன்னாட்டு விமான நிலையத்தில் வெளிநாட்டு பயணிகளின் பாஸ்போர்ட் பரிசோதனையில் முறைகேடில் ஈடுபட்ட தலைமைக் காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அண்ணா பன்னாட்டு விமான நிலையத்தின் சர்வதேச முனையத்தில் வெளிநாடு செல்லும் விமான பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை பரிசோதனை செய்வதற்காக குடியுரிமை பிரிவு அலுவலகம் செயல்படுகிறது. இது மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. இந்தப் பிரிவின் தலைமை அலுவலகம் சென்னை சாஸ்திரி பவனில் அமைந்துள்ளது. இப்பிரிவில் பணியாற்றுவதற்கு காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகள் டெபுடேஷன் முறையில் பணியமத்தப்பட்டு வருகின்றனர்.

கடந்த ஓராண்டு காலமாக சென்னை விமான நிலைய குடியுரிமை பிரிவில் காவல்துறை தலைமைக் காவலர் சரவணன் என்பவர் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவர் மீது பல்வேறு முறைகேடு புகார்கள் எழுந்து வந்தது. இதைத் தொடர்ந்து குடியுரிமை அலுவலர்களை கண்காணிக்கும் விஜிலென்ஸ் பிரிவு இவரது செயல்பாடுகளை கண்காணித்தது. மேலும் அங்குள்ள ரகசிய கண்காணிப்பு கேமராக்களையும் அவர்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வந்தனர். அப்போது சரவணன் வெளிநாடுகளுக்கு செல்லும் பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை பரிசோதிக்கும் போது முறைகேடுகளில் ஈடுபடுவது தெரியவந்தது.

இது குறித்து ஆதாரங்களுடன் சரவணனிடம் கேள்வி எழுப்பிய போது, அவரால் உரிய பதில் விளக்கம் அளிக்க முடியவில்லை. இதையடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு இமிகிரேஷன் பிரிவி தலைமை ஆணையருக்கு, விஜிலென்ஸ் பிரிவினர் அறிக்கை அனுப்பினர். இதன் பேரில் சரவணனை பணியிடை நீக்கம் செய்து இமிகிரேஷன் தலைமை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக அவரிடம் இமிகிரேஷன் விஜிலென்ஸ் பிரிவினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சரவணனை பயன்படுத்தி, முக்கிய வழக்கில் தொடர்புடைய யாரேனும் வெளிநாடு தப்பிச் சென்றார்களா என்பது தொடர்பாகவும் இந்த விசாரணை நடைபெற்று வருகிறது.