சிவகாசி பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து : 2 பேர் உயிரிழப்பு!


விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே காளையார்குறிச்சி பகுதியில் பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வந்தது. பத்துக்கும் மேற்பட்ட அறைகளில் இன்று காலை தொழிலாளர்கள் வழக்கம் போல் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். பட்டாசு தயாரிப்பதற்கு தேவையான மருந்துகளை தயார் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்த போது திடீரென வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த வெடி விபத்தில் பட்டாசு அலையில் இருந்த ஒரு அறை முழுவதும் தரைமட்டமானது. இந்த விபத்தில் மாரியப்பன் (45) முத்துமுருகன் (45) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த இரண்டு பெண்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். சிவகாசி அரசு மருத்துவமனையில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக காளையார் குறிச்சி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்து ஏற்பட்ட இடத்தில் சிவகாசி துணை ஆட்சியர் பிரியா ரவிச்சந்திரன் நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். நாக்பூர் லைசென்ஸ் பெற்று இந்த ஆலை இயங்கி வருவதாக கூறப்படும் நிலையில் அது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.