மின்சாரம் தாக்கி தாய் உயிரிழப்பு; தேடிச்சென்ற மகனும் உயிரிழந்த சோகம்!


நீலகிரி மாவட்டம் குன்னூர்-மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் காட்டேரி பகுதியில் வசித்து வந்தவர் மெஹ்ரூன் (65). இவருக்கு பைரோஸ் மற்றும் முபாரக் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இருவரும் வெளியூரில் வேலை செய்து வருவதால் இவர் தனது தாயாருடன் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 5ம் தேதி காலை வீட்டிலிருந்து வெளியே சென்றவர் திரும்ப வரவில்லை. குடும்பத்தினர் பல இடங்களில் தேடிய நிலையில், குன்னூர் காவல் நிலையத்தில் கடந்த 6ம் தேதி புகார் அளித்துள்ளனர்.

இதையடுத்து காவல்துறையினர் மற்றும் வனத்துறையினர் மூதாட்டி குடியிருந்த சுற்றுவட்டார பகுதிகளில் தேடுதலில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை பைரோஸ் தனது நண்பர்களுடன் வீட்டின் அருகில் உள்ள புதர்ப் பகுதிகளில் தனது தாயை தேடும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது ஒரு இடத்தில் மெஹ்ரூன் கீழே கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பைரோஸ் அவரை தூக்க முயற்சித்துள்ளார். அப்போது அவரும் அலறித் துடித்தபடி பைரோஸ் மயங்கினார். உடன் சென்றவர்கள் உடனடியாக அருகில் சென்று பார்த்தபோது மின்சாரம் தாக்கி இருவரும் உயிரிழந்தது தெரியவந்தது.

இது குறித்து உடனடியாக குன்னூர் போலீஸார், வனத்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் மின்சாரத்தை துண்டித்து, இருவரது உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.