கர்நாடகாவில் பரபரப்பு: பாஜக முன்னாள் அமைச்சரின் மருமகன் விஷம் குடித்து தற்கொலை!


கர்நாடகாவைச் சேர்ந்த பாஜக முன்னாள் அமைச்சர் பி.சி. பாட்டீலின் மகளின் கணவர் பிரதாப்குமார் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா பாஜக முன்னாள் அமைச்சர் பி.சி.பாட்டீலின் முதல் மகள் சௌமியா. இவரது கணவர் பிரதாப் குமார்(41). பல ஆண்டுகளாக மன உளைச்சலில் இருந்து வந்த பிரதாப் குமார், திடீரென நேற்று காணாமல் போனார். இது குறித்து தாவண்கெரே மற்றும் ஷிமோகா போலீஸ் அதிகாரிகளுக்கு பி.சி.பாட்டீல் தகவல் தெரிவித்த நிலையில், பிரதாப் குமாரை போலீஸார் தேட ஆரம்பித்தனர்.

இந்த நிலையில், ஹொன்னாலி வனப்பகுதியில் சாலையோரம் நின்றிருந்த ஒரு காரில் விஷம் குடித்த நிலையில் பிரதாப் குமார் இருந்துள்ளார். இதைப் பார்த்த போலீஸார், அவரை மீட்டு உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஷிமோகாவில் உள்ள மெகன் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி பிரதாப் குமார் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து ஹொன்னாலி காவல் நிலையத்தில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து முன்னாள் அமைச்சர் பி.சி.பாட்டீல் கூறுகையில்," கடந்த இரண்டு மாதங்களாக போதை ஒழிப்பு மையத்தில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அவர் நன்றாக இருந்தார். அரசியல் உள்பட எங்களின் அனைத்து விவகாரங்களையும் அவர் கவனித்து வந்தார். காலையில் ஒன்றாகத்தான் அனைவரும் உணவை சாப்பிட்டோம். இந்த நிலையில், இந்த அசம்பாவித சம்பவம் நடைபெற்றுள்ளது. அவரின் இறுதிச்சடங்குகள் கத்தலகெரெ கிராமத்தில் நடைபெறும்" என்றார். எதற்காக பிரதாப் குமார் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னாள் அமைச்சரின் மருமகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.