குன்னத்தூர் அருகே கட்டிடத் தொழிலாளி கொலை: மனைவி உள்பட 2 பேர் கைது


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் அருகே கட்டிடத் தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது மனைவி உட்பட இருவரை போலீஸார் கைது செய்தனர்.

குன்னத்தூர் அருகே சென்னேகவுண்டன் வலசு கருங்கல்மேடு பகுதி அருகே உள்ள புதரில் கடந்த 4ம் தேதி ஆண் சடலம் கிடப்பதாக கூறி அப்பகுதி பொதுமக்கள் குன்னத்தூர் போலீஸாருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் அங்கு சென்ற போலீஸார் உடலைக் கைப்பற்றி விசாரணையில் ஈடுபட்டனர். இறந்து கிடந்த நபர் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் என்றும், தலையில் பலத்த அடிபட்ட நிலையில் உயிரிழந்திருப்பதும் போலீஸாரின் விசாரணையில் தெரியவந்தது.

அவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என விவரம் ஏதும் தெரியாத நிலையில் போலீஸார் தொடர்ந்து விசாரித்தனர். மது போதையில் ஏற்பட்ட தகராறில் இந்தக் கொலை நிகழ்ந்திருக்கலாம் என யூகித்த போலீஸார் தொடர் விசாரணை நடத்தியதில், கொலையானது திருப்பூர் பி.என்.ரோடு சிவன் தியேட்டர் வீதியைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி சந்திரன் (51) என்பது தெரியவந்தது. இவருக்கு மனைவி மற்று மகள் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த 2ம் தேதி சடலமாக மீட்கப்பட்டது சந்திரன் என்பது போலீஸார் விசாரணையில் தெரியவந்தது. இதனிடையே, சந்தேகத்தின் அடிப்படையில் கேரளாவில் பதுங்கி இருந்த சந்திரனின் மனைவி பார்வதி (40) மற்றும் அவரது ஆண் நண்பரான நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையைச் சேர்ந்த ரவி (50) ஆகியோரை போலீஸார் குன்னத்தூருக்கு அழைத்து வந்து விசாரித்தனர்.

பகலில் கட்டிட வேலை செய்யும் சந்திரன், இரவில் காவலாளி வேலை செய்யும்போது உடன் காவலாளியாக ரவி வேலை செய்துள்ளார். அப்பழக்கத்தின் அடிப்படையில் வீட்டுக்கு சென்று வந்தபோது, சந்திரனின் மனைவியுடன் கூடா நட்பு ரவிக்கு ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த சந்திரன், நண்பன் ரவி மற்றும் அவரது மனைவி பார்வதியையும் கண்டித்துள்ளார். மேலும், இது தொடர்பாக தம்பதியர் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் சந்திரனை கொலை செய்ய ரவி மற்றும் பார்வதி இருவரும் திட்டமிட்டுள்ளனர். கடந்த 2-ம் தேதி மது அருந்துவதற்காக கருங்கல்மேடு பகுதிக்கு அழைத்து சென்ற ரவி மது போதையில் சந்திரனின் தலையில் ரவி அங்கு கிடந்த பாறாங்கல்லை போட்டு கொலை செய்துள்ளார்.

மேலும், போலீஸில் சிக்கிக்கொள்வோம் என்று எண்ணிய ரவி, சந்திரனின் மனைவி பார்வதியுடன் கேரளாவுக்கு தப்பிச் சென்றுள்ளனர். இதையடுத்து, ரவி மற்றும் கொல்லப்பட்ட சந்திரனின் மனைவி பார்வதி ஆகியோர் மீது கொலை வழக்குப் பதிவு செய்த போலீஸார், இருவரையும் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.