கம்பம் அரசு மருத்துவமனை கட்டுமானப் பணியின்போது விபத்து: தொழிலாளி பலியான சோகம்


கம்பம் அரசு மருத்துவமனை கட்டுமான பணியின் போது உயிரிழந்த தொழிலாளி நபிராஜன்

தேனி மாவட்டம் கம்பம் அரசு மருத்துவமனைக்கு நாள்தோறும் 500-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். மேலும் 50-க்கும் மேற்பட்டோர் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் ஒவ்வொரு மாதமும் சுமார் 200-க்கும் மேற்பட்ட பிரசவங்கள் பார்க்கப்பட்டு வருகிறது. கர்ப்பிணிகளுக்கு கூடுதல் மருத்துவ வசதிகளை வழங்கும் வகையில் கம்பம் மருத்துவமனையில் பிரசவ பிரிவிற்கு தனியாக 5 மாடிகள் கொண்ட கட்டிடம் கட்டவும், உள்கடமைப்பை மேம்படுத்தவும் 12 கோடி ரூபாய் நிதியை தேசிய சுகாதார இயக்கம் ஒதுக்கியது.

இதையடுத்து, தற்போது கட்டிட வேலைகள் துரித கதியில் நடந்து வருகிறது. இதில் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் மற்றும் மதுரையைச் சேர்ந்தவர்கள் என 50க்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர். கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக இங்கு கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இன்று மாலை இந்த கட்டிடத்தின் நுழைவாயிலில் உள்ள பால்கனிக்கு மேலே உள்ள பில்லர் அருகே, மதுரையைச் சேர்ந்த நம்பிராஜன், முனீஸ்வரன் மற்றும் ரத்தினவேல் ஆகியோர் பணியில் ஈடுபட்டிருந்தனர். பூச்சு வேலை நடந்து கொண்டிருந்த போது, திடீரென பில்லர் மற்றும் சாரம் இடிந்து விழுந்து உள்ளது. இதில் மூவரும் இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடினர்.

உடனடியாக அருகில் இருந்தவர்கள் இது தொடர்பாக தீயணைப்புத் துறையினருக்கும், காவல் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி மூவரையும் மீட்டனர். ஆனால், இதில் நம்பிராஜன் (40) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து, அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.