ஆந்திராவில் கண்டெய்னர் மீது கார் மோதி விபத்து: 2 பெண்கள் உள்பட 3 பேர் பலி!


சாலையோரம் நின்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது கார் மோதியதில் 2 பெண்கள் மற்றும் ஒரு ஆண் குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திராவில் உள்ள மேற்கு கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஒரு காரில் இன்று சென்று கொண்டிருந்தனர். அப்போது ஏலூரில் ​​மண்டல் பகுதியில் உள்ள லட்சுமிநகர் என்ற இடத்தில் சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது கார் வேகமாக மோதியது. இதில் காரில் இருந்த மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் கார் ஓட்டுநர் உள்பட இருவர் காயமடைந்தனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த போலீஸார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். சிதைந்த நிலையில் இருந்த காரில் இருந்து ஐந்து பேரை மீட்டனர். இதில் இரண்டு பெண்கள் மற்றும் ஒரு ஆண் குழந்தை உயிரிழந்தது. காயமடைந்த ஓட்டுநரிடம் விசாரித்த போது மேற்கு கோதாவரி மாவட்டம் பீமாவரத்தைச் சேர்ந்தவர்களை ஏற்றிக் கொண்டு சவாரி சென்றதாக தெரிவித்தார். இதையடுத்து அவர்கள் இருவரும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். உயிரிழந்த மூன்று பேரின் உடல்களை பிரேத பரிசோதனைக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக போலீஸார் விசாரணை நடத்திய போது விபத்தில் உயிரிழந்தது பீமாவரத்தைச் சேர்ந்த பாக்யஸ்ரீ (26), பொம்மா கமலாதேவி(53), நாகநிதினக்குமார் (2) என்பது தெரிய வந்தது. மேலும் காயமடைந்த ஓட்டுநர் வம்சி, நாகசண்முகம் ஆகியோர் என்பதும் தெரிய வந்தது. இந்தவிபத்து குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.