என்எல்சி சுரங்கத்தில் ஒப்பந்த தொழிலாளி பலி; உறவினர்கள் முற்றுகை போராட்டம்!


கடலூர் மாவட்டம் நெய்வேலியில் இந்திய அரசின் நெய்வேலி நிலக்கரி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று இரண்டாவது சுரங்கத்தில் நெய்வேலி பகுதியைச் சேர்ந்த அன்பழகன் என்ற ஒப்பந்த தொழிலாளி கன்வேயர் பெல்டை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டு அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதையடுத்து அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக நெய்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே அன்பழகன் உயிரிழப்பு தகவல் குறித்து அறிந்ததும், அவரது உறவினர்கள் ஏராளமானோர் என்எல்சி நிறுவனத்தின் முன்பாக குவிந்தனர். தொடர்ந்து, விபத்து ஏற்பட்டது குறித்த முழுமையான தகவல்களை தங்களுக்கு தெரிவிக்க வேண்டும் எனக் கூறி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தொடர்ந்து இதுபோன்று உயிரிழப்புகள் ஏற்பட்டு வருவதால் அதனை தடுக்க நிர்வாகம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் அவர்கள் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் நெய்வேலி பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.