பாகிஸ்தானில் பயங்கரம்... பிறந்து 15 நாட்களான குழந்தையை உயிருடன் புதைத்த தந்தை!


பாகிஸ்தான்.

சிகிச்சை செய்ய பணம் இல்லாத காரணத்தால் பிறந்து 15 நாட்களேயான பெண் குழந்தை உயிருடன் புதைக்கப்பட்ட சம்பவம் பாகிஸ்தானில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் தலைநகரான இஸ்லாமாபாத்தில் உள்ள சிந்து மாகாணத்தில் உள்ள நவ்ஷாஹ்ரோ ஃபெரோஸ் பகுதியில் உள்ள தருஷா கிராமத்தைச் சேர்ந்தவர் தயாப். இவருக்கு கடந்த 15 நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. ஆனால், குழந்தையின் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க பணமில்லாமல் அவர் தவித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அவரது குழந்தை காணாமல் போனது. இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் தயாப்பை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது பணப்பிரச்சினை காரணமாக குழந்தைக்கு சிகிச்சை செய்ய பணமில்லாததால் குழந்தையை புதைத்து விட்டதாக தயாப் கூறினார்.

இதைடுத்து புதைக்கப்பட்ட குழந்தையின் உடலை மீட்ட போலீஸார், குழந்தையின் சடலத்தை தடவியல் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் தயாப் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெற்ற குழந்தையை தந்தையே உயிருடன் புதைத்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.