பேருந்து கவிழ்ந்து விபத்து: பள்ளி மாணவ, மாணவிகள் 40 பேர் காயம்


பஞ்ச்குலா: ஹரியாணா மாநிலம், பஞ்ச்குலா மாவட்டத்தில் இன்று பேருந்து கவிழ்ந்த விபத்தில் 40 மாணவ, மாணவிகள் காயமடைந்தனர்.

ஹரியாணா மாநிலம், பஞ்ச்குலாவில் உள்ள பிஞ்சோர் அருகே நவுலதா கிராமத்தில் 'ஹரியாணா ரோட்வேஸ்' பேருந்து இன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் அந்தப் பேருந்தில் பயணித்த பள்ளி மாணவ, மாணவிகள் சுமார் 40 பேர் காயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக பிஞ்சூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

படுகாயமடைந்த ஒரு பெண் மேல் சிகிச்சைக்காக சண்டீகரில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். பேருந்து ஓட்டுநரின் அதிவேகமே விபத்துக்குக் காரணம் என போலீஸார் தெரிவித்தனர். மேலும், பேருந்தில் அளவுக்கு மீறி பயணிகள் ஏற்றப்பட்டனர். இதனால் கூட்டம் நிரம்பி வழிந்தது.

அதிக பாரம் ஏற்றியதும், மோசமான சாலையும் விபத்துக்கு கூடுதல் காரணங்கள் என போலீஸார் தரப்பில் கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக, கல்கா சட்டப் பேரவைத் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ- பிரதீப் சவுத்ரி தெரிவித்துள்ளார்.