கோவையில் அதிர்ச்சி... தண்ணீர் தொட்டியில் சடலமாக மிதந்த தாய், 2 மகள்கள்!


கொலை நடந்த வீட்டில் போலீஸார் சோதனை

கோவை ஒண்டிபுதூர் அடுத்த நெசவாளர் காலனி பகுதியில் வசித்து வருபவர் தங்கராஜ். இவருக்கு புஷ்பா என்ற மனைவியும், ஹரிணி (9), ஷிவானி (3) ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர். இன்று காலை கணவர் தங்கராஜ் தனது மனைவி மற்றும் குழந்தைகள் வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டியில் சடலமாக மிதப்பதாக போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற சிங்கநல்லூர் போலீஸார் தொட்டியில் இருந்து மூவரது உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து தங்கராஜிடம் விசாரணை மேற்கொண்டதில், அவர் தனது மூத்த மகள் ஹரிணியை கொலை செய்து தண்ணீர் தொட்டியில் வீசியதாக கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். இதையடுத்து மற்ற இருவரும் கொலை செய்யப்பட்டார்களா? அல்லது மகள் இறந்த துக்கத்தில் இருவரும் தற்கொலை செய்து கொண்டார்களா? என்பது தொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தங்கராஜ் மற்றும் புஷ்பாவிற்கு இடையே அடிக்கடி குடும்பத்தகராறு இருந்து வந்ததாக கூறப்படுவது குறித்தும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.