சென்னை விமான நிலையத்தில் கடத்தி வரப்பட்ட பச்சோந்திகள் பறிமுதல்


தாய்லாந்து நாட்டின் பாங்காக் நகரிலிருந்து இன்று காலை விமானம் ஒன்று சென்னை விமான நிலையத்திற்கு வருகை தந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்தனர். அப்போது சென்னையைச் சேர்ந்த 30 வயது வாலிபர் ஒருவர், இரண்டு அட்டை பெட்டிகளை எடுத்துக் கொண்டு கிரீன் சேனல் வழியாக வெளியில் செல்ல முயன்றுள்ளார். ஆனால் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்டதால் அவரை தடுத்து நிறுத்தி அட்டைப்பெட்டிகளில் என்ன இருக்கிறது என்று கேட்டுள்ளனர்.

குழந்தைகள் விளையாடும் பொம்மைகள், சாக்லேட்டுகள், பிஸ்கட்டுகள் ஆகியவை இருப்பதாக அவர் கூறியுள்ளார். ஆனால் சுங்கத்துறை அதிகாரிகள் சந்தேகம் அடைந்து அட்டைப்பெட்டிகளை திறந்து பார்த்து சோதனை நடத்தினர். அப்போது அந்த அட்டைப் பெட்டிக்குள் பச்சை, நீலம், மஞ்சள் மற்றும் ஆரஞ்சு கலர்களில் பச்சோந்திகள் உயிருடன் இருந்துள்ளன. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த சுங்கத்துறை அதிகாரிகள் உடனடியாக மத்திய வன உயிரின காப்பக குற்றப்பிரிவு அதிகாரிகளுக்கு இது குறித்து தகவல் தெரிவித்தனர். விமான நிலையத்திற்கு வந்த வன உயிரின காப்பக அதிகாரிகள், அவற்றை ஆய்வு செய்தபோது அவை ஆப்பிரிக்க வகை பச்சோந்திகள் என்பது தெரியவந்தது.

முறையான ஆவணங்கள் இன்றி இந்த பச்சோந்திகளை விற்பனைக்காக கடத்தி வந்தது தெரிய வந்ததை அடுத்து வாலிபரை கைது செய்து சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த பச்சோந்திகளை இந்தியாவுக்குள் அனுமதித்தால், வெளிநாட்டு நோய் கிருமிகள் பரவி, விலங்குகள், பறவைகள் மற்றும் மனிதர்கள் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் 67 பச்சோதிகள் உயிரிழந்த நிலையில், உயிருடன் இருந்த 335 பச்சோந்திகளை மீண்டும் விமானம் மூலம் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கிற்கு சுங்கத்துறை அதிகாரிகள் அனுப்பி வைத்தனர்.