கடலூரில் பாமக பிரமுகருக்கு அரிவாள் வெட்டு: கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதி


கடலூர்: கடலூரில் பாமக பிரமுகரை 4 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டி விட்டு தப்பிச் சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் சூரப்பன்நாயக்கன்சாவடியைச் சேர்ந்தவர் சிவசங்கர். பாமக பிரமுகரான இவர் இன்று மதியம் தனது வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனங்களில் அங்கு வந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல் சிவசங்கரை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர்.

இதில் அவருக்கு 6 இடங்களில் வெட்டுக்காயம் உடலில் ஏற்பட்டது. இந்நிலையில் தாக்குதல் நடத்திய கொலை கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டது. உயிருக்குப் போராடிய சிவசங்கரை அப்பகுதியிலிருந்தவர்கள் மீட்டு, கடலூர் அரசு தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிருக்கு மிகவும் ஆபத்தான நிலையில் உள்ள சிவசங்கருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதற்கிடையே கடலூர் மாவட்டம் முழுவதும் போலீஸார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். சிவசங்கரை வெட்டியவர்கள் யார்? எதற்காக இந்த தாக்குதல் நடத்தப்பட்டது என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தாக்குதலுக்குள்ளான சிவசங்கர், வன்னியர் சங்கத்தில் கடலூர் முன்னாள் நகர தலைவராகவும் இருந்துள்ளார். இந்த சம்பவம் கடலூர் மாவட்டத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் நேற்று இரவு பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், ஒரு கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சோகம் மறைவதற்குள்ளாகவே தற்போது கடலூரில் பாமக பிரமுகர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.