சிகிச்சை பெற வந்த சிறுமிக்குப் பாலியல் தொல்லை: மருத்துவர் மீது போக்சோ வழக்கு


கேரளா: காசர்கோடு மாவட்டத்தில் காய்ச்சலுக்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்த 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மருத்துவர் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கேரளா மாநிலம், காசர்கோடு மாவட்டத்தில் சந்தேராவில் தனியார் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனைக்கு காய்ச்சலுக்காக சிகிச்சை பெற 13 வயது சிறுமி நேற்று வந்துள்ளார். அங்கு பணியில் இருந்த மருத்துவர் சி.கே.பி.குஞ்சப்துல்லா, சிறுமிக்கு பரிசோதனை செய்துள்ளார். அப்போது பாலியல் ரீதியாக அந்த சிறுமியிடம் மருத்துவர் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.

சிகிச்சை முடிந்து வீட்டிற்கு வந்த அச்சிறுமி, மருத்துவமனையில் நடந்த விஷயத்தை தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதன் பேரில், அந்த சிறுமியின் பெற்றோர், மருத்துவர் மீது போலீஸில் புகார் அளித்தனர். இதன் பேரில், அந்த மருத்துவர் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கில் சிறுமியின் வாக்குமூலத்தை போலீஸார் பதிவு செய்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும், குற்றவாளி விரைவில் கைது செய்யப்படுவார் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். காய்ச்சலுக்கு சிகிச்சை பெற வந்த சிறுமியிடம் பாலியல் ரீதியாக மருத்துவர் சில்மிஷம் செய்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.