உத்தராகண்ட்டில் பயங்கர நிலச்சரிவு: சுற்றுலாப் பயணிகள் இருவர் உயிரிழப்பு - அதிர்ச்சி வீடியோ


கோபேஷ்வர்: உத்தராகண்ட் மாநிலம், சாமோலி மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்டு பாறை விழுந்ததில், ஹைதராபாத்தைச் சேர்ந்த 2 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர்.

உத்தராகண்ட் மாநிலம், சாமோலி மாவட்டம், பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலையில் சத்வபீபால் அருகே கவுச்சர் - கர்ணபிரயாக் இடையே இன்று திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் மலைப்பகுதியில் இருந்து பாறாங்கற்கள் சாலையில் சரிந்து விழுந்தன. அப்போது அந்த வழியே, இமயமலை பகுதி கோயிலுக்கு சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் திரும்பி வந்து கொண்டிருந்த இருவர் மீது பாறாங்கற்கள் விழுந்தன.

இதில் சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்தனர். விசாரணையில் உயிரிழந்தவர்கள் நிர்மல் ஷாஹி (36), சத்ய நாராயணா (50) என்பதும், இவர்கள் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது.

கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டதால் பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலையில் கவுச்சர் - ருத்ரபிரயாக் இடையே கமேடா, பிபால்கோட்டி அருகே பனிர் பானி, டாங்னி அருகே பகல்னாலா, ஜோஷிமத் - பத்ரிநாத் இடையே பினோலா, கஞ்சங்கா உள்ளிட்ட 6-க்கும் மேற்பட்ட இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், சாலை சீரமைப்புப் பணிகளில், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மற்றும் எல்லை சாலைகள் அமைப்பினர் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். நிலச்சரிவு காரணமாக ருத்ரபிரயாக் -கேதார்நாத் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.