கடலூரில் லாரி மீது மினி லாரி மோதி விபத்து; 2 பேர் சம்பவ இடத்திலேயே பலி!


கடலூர் அருகே புதுச்சத்திரம் பகுதியில் மேம்பாலம் ஒன்று அமைந்துள்ளது. நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் இந்த மேம்பாலத்தில் பயணித்து வருகின்றன. இன்று காலை அவ்வழியாக வந்த டாரஸ் லாரி ஒன்றின் டயர் திடீரென பஞ்சர் ஆகியுள்ளது. இதனால் மேம்பாலத்தின் மேலேயே சாலையோரமாக டாரஸ் லாரியை நிறுத்திவிட்டு டயரை மாற்றும் பணியில் ஓட்டுநர் ஈடுபட்டிருந்தார்.


அப்போது திண்டிவனத்தில் இருந்து காரைக்காலை நோக்கி மினி லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. மேம்பாலத்தின் மீது வந்த போது, எதிர்பாராத விதமாக, நின்று கொண்டிருந்த லாரியின் பின்புறம் மினி லாரி அதிவேகத்தில் மோதியது. இதில் மினிலாரியை ஓட்டி வந்த காரைக்கால் சேமியான்குளம் பகுதியைச் சேர்ந்த அன்வர் என்பவரது மகன் சையது முகமது (25) மற்றும் அவருடன் வந்த காரைக்கால் மீராப்பள்ளி தோட்டப் பகுதியைச் சேர்ந்த மஜீத் மகன் முகமது ரியாஸ் (20) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.


விபத்து குறித்து தகவல் அறிந்ததும் புதுச்சத்திரம் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் இருவரது உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.