ஆம்ஸ்டிராங் கொலை சம்பவம்... பதற வைக்கும் சிசிடிவி வீடியோ


சென்னை பெரம்பூர் பகுதியில் வசித்து வந்த பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவரும், வழக்கறிஞருமான ஆம்ஸ்டிராங் நேற்று இரவு அவரது வீட்டின் அருகே மர்ம நபர்களால் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆம்ஸ்டிராங் கொலை செய்யப்பட்டதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.


இந்த நிலையில், ஆம்ஸ்டிராங் கொலை தொடர்பாக சென்னை அண்ணா நகர் காவல் நிலையத்தில் 8 பேர் சரணடைந்ததை அடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆற்காடு சுரேஷின் கொலைக்கு பழிக்கு பழியாக இந்த கொலை சம்பவம் நடந்துள்ளது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆற்காடு சுரேஷின் பிறந்தநாளான நேற்று, ஆம்ஸ்டிராங்கை கொல்ல திட்டம் தீட்டி அதனை நிறைவேற்றியுள்ளதாக கைதானவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதனிடையே 3 இருசக்கர வாகனங்களில் வந்த 6 பேர் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டதாக அங்கிருந்தவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். இந்நிலையில் ஆம்ஸ்டிராங்கை கொலை செய்துவிட்டு, ரத்தம் தோய்ந்த அரிவாள்களுடன், கொலையாளிகள் இருசக்கர வாகனங்களில் தப்பிச்செல்லும் சிசிடிவி வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. ஆற்காடு சுரேஷின் கிளப்பில் பணியாற்றுவோரின் உதவியோடு, திட்டமிட்டு இந்த படுகொலை நிறைவேற்றப்பட்டிருப்பதாக கூறப்படும் நிலையில், மேலும் பலர் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.