திருச்சியில் தவெக பிரமுகர் கொலையில் தேடப்பட்டு வந்த ரவுடியை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த போலீஸார்


திருச்சி லால்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ரவுடி ராஜா.

திருச்சி: திருச்சி மாவட்டம் லால்குடி அருகேயுள்ள ஆங்கரை வ.உ.சி. நகரைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் மகன் நவீன் (எ) நவீன்குமார்(29). நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகப் பிரமுகரான இவர்,சரித்திரப் பதிவேடு குற்றவாளி ஆவார்.

ஆதிகுடி கோவிந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்த ராஜா (எ) கலைப்புலிராஜா(27) மீது, கொலை வழக்குநிலுவையில் உள்ளது. திருவெறும்பூர் காட்டூரைச் சேர்ந்த பிரபல ரவுடியின் கும்பலில் நவீன்குமார், ராஜா இருவரும் இருந்துள்ளனர். கடந்த 7 மாதங்களுக்கு முன்பு அந்தகும்பலில் இருந்து நவீன்குமார்பிரிந்துசென்றார். பின்னர், நவீன்குமார், ராஜா ஆகியோருக்கிடையே விரோதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த 2-ம் தேதி மலையப்பபுரத்தைச் சேர்ந்த ராஜாவின் நண்பர் மகளின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ராஜா, நவீன்குமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கலந்துகொண்டு, மது அருந்தினர். அப்போது ஏற்பட்ட தகராறில், நவீன்குமார் மற்றும் அவரது ஆதரவாளர்களை ராஜா தரப்பினர் தாக்கியுள்ளனர். இதுகுறித்து நவீன்குமார் தரப்பில், லால்குடி போலீஸில் புகார் அளிக்கப்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த ராஜா மற்றும் அவரது ஆதரவாளர்கள், கடந்த 3-ம் தேதி லால்குடி அகிலாண்டேஸ்வரி நகர் பகுதிக்கு நவீன்குமாரை வரவழைத்து, அவரை வெட்டிக் கொலை செய்துவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

இது தொடர்பாக லால்குடி டிஎஸ்பி ரகுபதி ராஜா, ஆய்வாளர் சரவணன் மற்றும் போலீஸார் வழக்கு பதிவு செய்து, ராஜா, அவரது நண்பர் ஸ்ரீநாத் உட்பட 6 பேரைத் தேடி வந்தனர்.

இந்நிலையில், திருச்சி மாவட்டம் சிறுகனூர் பகுதியில் பதுங்கி இருந்த ராஜாவைப் பிடிக்க போலீஸார் அங்கு சென்றனர். அப்போது,அவர் போலீஸாரைத் தாக்கிவிட்டு, அங்கிருந்து தப்ப முயன்றார்.

இதனால், போலீஸார் ராஜாவின் காலில் துப்பாக்கியால் சுட்டு, அவரை மடக்கிப் பிடித்தனர். இதில் காயமடைந்த ராஜா, லால்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது