நாகை அருகே பரபரப்பு - மூதாட்டிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞரால் அதிர்ச்சி


நாகப்பட்டினம்: நாகை மாவட்டம், கீழ்வேளூர் பகுதியில் 60 வயது மூதாட்டியை தாக்கி, பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை போலீஸார் தேடி வருகின்றனர்.

நாகை மாவட்டம், கீழ்வேளூர் அடுத்த வடக்காலத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் மனோகரன். இவரது மனைவி வாசுகி (60). இவர் வாரம்தோறும் புதன்கிழமை இரவு, நாகை பாப்பாகோவிலில் உள்ள தர்காவில் படுத்து உறங்கிவிட்டு, மறுநாள் அதிகாலை வடக்காலத்தூரில் உள்ள தனது வீட்டிற்குச் செல்வது வழக்கம்.

இதன்படி, கடந்த மாதம் 21ம் தேதி பாப்பாகோவிலில் ஆட்டோவுக்காக வாசுகி நின்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த ஓர் இளைஞர், உங்கள் ஊருக்கு தான் செல்கிறேன். எனவே வாகனத்தில் ஏறுங்கள் ஊரில் இறக்கிவிடுகிறேன் என கூறியுள்ளார். அதற்கு வாசுகி மறுத்துள்ளார். இருப்பினும் அந்த இளைஞர், உங்களது மகன் போன்று நினைத்துக் கொண்டு வாகனத்தில் வாருங்கள் எனக் கூறி கட்டாயப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில் அந்த இளைஞரின் வாகனத்தில் ஏறிய மூதாட்டிக்கு அந்த இளைஞர் வாகனத்தை ஓட்டிக்கொண்டே, பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அவரது செயலால் அதிர்ச்சி அடைந்த மூதாட்டி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் வாசுகியை தாக்கியும், மிரட்டியும் தொடர்ந்து அழைத்துச் சென்றுள்ளார். ஒரு கட்டத்தில் அச்சமடைந்த மூதாட்டி இருசக்கர வாகனத்திலிருந்து கீழே குதித்துள்ளார். இதில் படுகாயமடைந்த அவர் மீது இருசக்கர வாகனத்தை ஏற்றிவிட்டு தப்பிச் சென்றுள்ளார். இதில் மூதாட்டியின் இடதுகால் முறிந்தது. இந்நிலையில் அப்பகுதியினர் வாசுகியை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதுகுறித்து வாசுகியின் உறவினர்கள் கீழ்வேளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால் போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதைத் தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதில் மூதாட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்து தாக்கியது பெரிய நரியங்குடி பகுதியைச் சேர்ந்த குமரவேல் என்பதும், அவர் பாப்பாகோவிலில் முடிதிருத்தும் கடை வைத்திருப்பதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து தனிப்படை அமைக்கப்பட்டு, தலைமறைவாக உள்ள குமரவேலை போலீஸார் தேடி வருகின்றனர். 60 வயது மூதாட்டியை இளைஞர் பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் நாகை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.