முதியவரின் வங்கிக் கணக்கிலிருந்து நூதன முறையில் ரூ.94 ஆயிரம் திருட்டு @ விருகம்பாக்கம்


சென்னை: விருகம்பாக்கத்தில் முதியவரின் வங்கிக் கணக்கிலிருந்து நூதன முறையில் பணம் திருடப்பட்டுள்ளது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சென்னை விருகம்பாக்கதைச் சேர்ந்தவர் நாராயணன் (60). இவர் தனியார் வங்கி ஒன்றில் கணக்கு வைத்துள்ளார். தனது வங்கி ஏடிஎம் கார்டை பயன்படுத்தி ஐந்தாயிரம் ரூபாய் பணம் எடுத்துள்ளார். பிறகு அவர் வீட்டுக்குச் சென்றுள்ளார். இந்த நிலையில் அவரது வங்கிக் கணக்கில் இருந்து எட்டு முறை மொத்தம் ரூ.94 ஆயிரம் எடுக்கப்படுள்ளதாக குறுஞ்செய்தி வந்துள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த முதியவர், இது குறித்து விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். ஸ்கிம்மர் கருவி மூலம் முதியவர் நாராயணனின் ஏடிஎம் ரகசிய எண்ணை எடுத்து புதிய கார்டை பயன்படுத்தி மோசடி நடைபெற்றுள்ளதா? அல்லது வேறு எதேனும் புதிய வகையில் மோசடி நடைபெற்றுள்ளதா என விருகம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.