லாபம் ஈட்டி தருவதாக கூறி கோவையில் ரூ.13.79 லட்சம் மோசடி: போலீஸ் விசாரணை


கோவை: கோவையில் முதலீட்டுத் தொகைக்கு அதிக லாபம் தருவதாகக் கூறி ரூ.13.79 லட்சம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக மாவட்ட சைபர் க்ரைம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை கணபதி அருகேயுள்ள, மணியகாரன்பாளையம் திருமகள் நகரைச் சேர்ந்தவர் மாதவராஜ் (59). இவர், கோவை மாநகர சைபர் க்ரைம் போலீஸாரிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், "கடந்த ஏப்ரல் மாதம் அறிமுகம் இல்லாத ஒருவர் என்னை டெலி கிராம் செயலி குழு மூலம் தொடர்பு கொண்டார். அப்போது ஆன்லைன் தளங்களில் பல்வேறு வேலை வாய்ப்புகள் உள்ளன. ஆன்லைன் மூலம் பகுதி நேர வேலை வாய்ப்பு உள்ளது. அதாவது, முதலீடு செய்யும் தொகைக்கு ஏற்ப லாபத் தொகையும், பின்னர் முதலீட்டுத் தொகையும் திருப்பித் தரப்படும் எனக் கூறினார்.

இதை நம்பிய நான் பல்வேறு தவணைகளில் அந்த நபர் கூறிய வங்கிக் கணக்குக்கு ரூ.13.79 லட்சத்தை அனுப்பி வைத்தேன். ஆனால், அந்த நபர் கூறியபடி எனக்கு எந்த லாபத் தொகையும் கிடைக்கவில்லை. மேலும், தான் முதலீடு செய்த தொகையையும் திரும்பப் பெற முடியவில்லை. என்னிடம் பேசிய நபரையும் தொடர்பு கொள்ள முடியாத நிலையில்தான் மோசடி செய்யப்பட்டது தெரிந்தது. இது குறித்து போலீஸார் விசாரித்து எனது தொகையை மீட்டுத் தர வேண்டும்’ எனக் வலியுறுத்தியுள்ளார்.

இப்புகாரின் அடிப்படையில் கோவை மாவட்ட சைபர் க்ரைம் போலீஸார், மோசடி மற்றும் தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து மோசடி நபரை கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.