மதுரையில் பூட்டிய வீட்டுக்குள் அழுகிய நிலையில் தம்பதியர் உடல்கள் மீட்பு: போலீஸ் விசாரணை


மதுரை: மதுரையில் பூட்டிய வீட்டுக்குள் அழுகிய நிலையில் தம்பதியரின் உடல்கள் மீட்கப்பட்டன. கவனிக்க யாருமின்றி அவர்கள் தற்கொலை செய்து கொண்டார்களா என்ற கோணத்தில் சம்பவம் குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.

மதுரை ஆனையூர் பகுதியிலுள்ள டிஎன்எச்பி காலனியைச் சேர்ந்தவர் மாரியப்பன் (70), இவரது மனைவி பாக்கியம் (64), இவர்கள் அப்பகுதியில் வாடகை வீட்டில் வசித்தனர். மாரியப்பன் தனியார் பள்ளி ஒன்றில் பாதுகாவலராக பணிபுரிந்தார். பாக்கியம் சில மாதமாகவே உடல்நிலை பாதித்த நிலையில், அவரை மாரியப்பன் கவனித்தார். உணவு சமைக்க முடியாத சூழலில் ஓட்டலில் வாங்கிக் கொடுத்து மனைவியைப் பராமரித்தார்.

இந்நிலையில், ஓரிரு நாளாகவே மாரியப்பனை வெளியில் காணவில்லை. இன்று காலை அவரது வீட்டிற்குள் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அக்கம், பக்கத்தினர் கூடல்புதூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்குச் சென்ற போலீஸார் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, கட்டிலில் பாக்கியமும், கழிப்பறையில் மாரியப்பனும் அழுகிய நிலையில், சடலமாக கிடந்தது தெரிய வந்தது. தொடர்ந்து கைரேகை நிபுணர்களை வரவழைக்கப்பட்டனர். அவர்கள் ஆய்வுக்கு பிறகு இருவரின் உடல்களும் மீட்கப்பட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. மாரியப்பனின் உடல் அருகே விஷ பாட்டில் ஒன்றும் கிடந்தது. அதை போலீஸார் கைப்பற்றினர்.

இந்த தம்பதிக்கு குழந்தைகள் இல்லை. வயதான காலத்தில் பாக்கியத்திற்கும் உடல்நிலை பாதித்தால், அவரை பராமரிக்க முடியாத நிலையிலும், அதற்கு போதிய பொருளாதார வசதி இன்றியும் இருவரும் விரக்தியில் இருந்துள்ளனர். உடல்நிலை பாதித்து பாக்கியம் உயிரிழந்ததால், மாரியப்பனும் விஷம் குடித்து தற்கொலை செய்திருக்கலாம் அல்லது இருவரும் தற்கொலைக்கு முடிவெடுத்து விஷத்தை குடித்துவிட்டு இறந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் சந்தேகிக்கின்றனர். இச்சம்பவம் ஆனையூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.