உன் வீட்டிலிருந்து 10 லட்சம் வாங்கி வா… மனைவியின் நெற்றியில் துப்பாக்கியை வைத்து மிரட்டிய எஸ்.ஐ!


10 லட்ச ரூபாய் வரதட்சணை கேட்டு மனைவியின் நெற்றியில் துப்பாக்கியை வைத்து மிரட்டிய அவரது கணவரான எஸ்.ஐ உள்பட மூன்று பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

ஆந்திர மாநிலம், அன்னமய்யா மாவட்டம் குருகுல பேட்டையைச் சேர்ந்தவர் சுகுமார் (28). இவர் முதிவேடு காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளராக வேலை செய்து வருகிறார். இவருக்கும் ஜாப்பர்ஸ் விஷ்ணு பிரியா (24) என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இந்நிலையில் சுகுமார், அவரது தந்தை தேவராஜ், தாயார் குருவராணி ஆகியோர் அதிக வரதட்சணை கேட்டு விஷ்ணு பிரியாவை கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். நேற்று முன்தினம் மீண்டும் 10 லட்ச ரூபாய் வரதட்சணை கேட்டு விஷ்ணு பிரியாவை சுகுமார் அடித்ததாக கூறப்படுகிறது. அப்போது தன்னிடம் இருந்த கைத்துப்பாக்கியை எடுத்து விஷ்ணுபிரியாவின் நெற்றிப் பொட்டில் வைத்து வரதட்சணை வாங்கி வராவிட்டால் சுட்டுக் கொன்று விடுவதாக மிரட்டியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த விஷ்ணு பிரியா, மதனப்பள்ளியில் உள்ள தனது தாய் வீட்டிற்குச் சென்றார். அத்துடன் அங்குள்ள காவல் நிலையைத்தில் புகாரும் செய்தார். இதையடுத்து சுகுமார் மற்றும் அவரது பெற்றோர் மீது வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள அவர்களை போலீஸார் தேடி வருகின்றனர். வரதட்சணை கேட்டு மனைவியின் நெற்றியில் துப்பாக்கியை வைத்து அவரது போலீஸ் கணவரே மிரட்டிய சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

x