திருவள்ளூரில் கடத்தல் வழக்கில் 6 பேர் கைது: சிவில் சப்ளை சிஐடி போலீசார் நடவடிக்கை


சென்னை: திருவள்ளூர் அருகே சிவில் சப்ளை சிஐடி பிரிவு போலீசார் டாங்கர் லாரி மற்றும் டாடா ஏஸ் வாகனங்களை சோதனை செய்ததில் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றை திருடியதாக 6 ஓட்டுநர்கள் கைது செய்யப்பட்டனர்.

பொது விநியோகத்திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு தமிழக அரசால் மானிய விலையில் வழங்கப்படும் அரிசி போன்ற இன்றியமையாத அத்தியாவசிய பண்டங்கள் கடத்தல், பதுக்கலை தடுத்தல் மற்றும் பெட்ரோலியப் பொருட்கள் கலப்படத்தை தடுக்க தமிழக காவல்துறையின் சிவில் சப்ளை சிஐடி பிரிவு போலீசார் பல்வேறு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக அப்பிரிவு ஐஜி ஜோசி நிர்மல் குமார் மேற்பார்வையில் தனிப்படை போலீசார் திருவள்ளுர் மாவட்டம், மாத்தூர், டெலிகாம் நகர், ராஜ் கந்தா ஸ்டீல்ஸ் எதிரே கண்காணித்தனர்.

அப்போது அந்த பகுதியில் கண்காணிப்பு பணியின் போது சந்தேகப்படும்படியாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டாங்கர் லாரி மற்றும் டாடா ஏஸ் வாகனங்களை சோதனை செய்ததில் டாங்கர் லாரியிலிருந்து கள்ளச் சந்தையில் விற்பதற்காக பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவை திருடியது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து வாகன ஓட்டுநர்களிடம் விசாரணை செய்ததில் எண்ணுர் டாங்க் முனையத்திலிருந்து கல்பாக்கத்திலுள்ள நீலா சாமி ஏஜென்சிக்கு செல்ல வேண்டிய டாங்கர் லாரியை வழியில் நிறுத்தி அதிலிருந்து பெட்ரோல் திருடியதாக அவர்கள் ஒப்புக்கொண்டனர்.

மேலும், லாரி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பகுதியில் உள்ள பேரல்களில் சோதனை செய்ததில் தொழிற்சாலைக்கு பயன்படுத்தக் கூடிய ஆயிலை கள்ளச் சந்தையில் விற்பதற்காக சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்த விஜயக்குமார், சீனிவாசன், வேலாயுதம் ஆகியோர் திருடி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து ஓட்டுநர்கள் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடமிருந்து கள்ளச் சந்தையில் விற்பதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த பெட்ரோலிய பொருட்கள் சுமார் 16,400 லிட்டர் மற்றும் ஒரு டாங்கர் லாரி, ஒரு டாடா ஏஸ் ஆகிய வாகனங்கள் ஆகியவைகளைக் கைப்பற்றினர். இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.