குரோம்பேட்டை: மது அருந்த பணம் தராத மாமியாரை கொலை செய்த மருமகன் கைது


குரோம்பேட்டை காவல் நிலையம்

குரோம்பேட்டை: குரோம்பேட்டையில் மது அருந்தப் பணம் கேட்டதால் ஏற்பட்ட தகராறில் மாமியாரின் தலையில் கல்லைத் தூக்கிப் போட்டு கொலை செய்த மருமகனை போலீஸார் கைது செய்தனர்.

குரோம்பேட்டை லட்சுமிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் வேணுகோபால் இவரது மனைவி சிவ பூஷணம் (65). இவர்களுக்கு கன்னியப்பன், குமார், சுரேஷ் ஆகிய மூன்று மகன்களும் சசிகலா என்ற‌ ஒரு‌ மகளும் உள்ளனர். இந்நிலையில், கடந்த 10 வருடத்துக்கு முன்பு மகள் சசிகலா ராமகிருஷ்ணன் (46) என்பவரைக் காதல் திருமணம் செய்து கொண்டார். அவர் இரண்டு பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்த நிலையில் ராமகிருஷ்ணனுக்கு அதிகக் குடிப்பழக்கம் இருந்து வந்த காரணத்தால் கணவனை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டார்.

அன்று முதல் ராமகிருஷ்ணன் தனது இரண்டு பிள்ளைகளுடன் மாமியார் வீட்டிலேயே தங்கி கொத்தனார் வேலை செய்து வந்தார். அதிக குடிப்பழக்கம் இருந்த காரணத்தால் சரியாக வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்த ராமகிருஷ்ணன், குடிக்க பணம் கேட்டு அடிக்கடி மாமியாரிடம் தகராறு செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று மீண்டும் குடிப்பதற்கு பணம் கேட்டு மாமியாரிடம் தகராறு செய்திருக்கிறார் ராமகிருஷ்ணன். அவர் தர மறுத்ததால் வீட்டின் அருகில் இந்த ஹாலோ பிளாக் கல்லை எடுத்து மாமியாரின் தலையின் மீது போட்டுவிட்டு, அவர் காதில் அணிந்திருந்த இரண்டு கம்மல்களை அறுத்துக் கொண்டு ஓடி இருக்கிறார். சிவபூஷணத்தின் அலறல் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்திருக்கிறார்கள். அப்போது சிவபூஷணம் தலையில் பலமான காயத்துடன் துடித்துக் கொண்டு இருந்திருக்கிறார்.

உடனே அவரை மீட்டு தாம்பரம் அரசு பொது மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். அங்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் சிவபூஜணம். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு அவர் உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக சிவபூஷணத்தின் மகன் குமார் (48) குரோம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து, செங்கல்பட்டு மாவட்டம், திருமேனி பகுதியில் உள்ள நண்பர் மோகன் என்பவர் வீட்டில் பதுங்கி இருந்த ராமகிருஷ்ணனை கைது செய்தனர்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தனது மாமியார் சிவபூஷணம் தன்னை வீட்டில் சேர்க்காமலும் சரியானபடிக்கு உணவு தராமல் தொந்தரவு செய்து வந்ததால் ஆத்திரத்தில் மது போதையில் இவ்வாறு செய்துவிட்டதாக ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.