சென்னையில் மெத்தபெட்டமைன் போதைப் பொருள்கள் வைத்திருந்த 2 பேர் கைது


சென்னை: கொடுங்கையூரில் மெத்தபெட்டமைன் போதைப் பொருட்கள் வைத்திருந்த இரண்டு பேரை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை கொடுங்கையூர் பகுதியில் மெத்தபெட்டமைன் போதைப் பொருட்கள் நடமாட்டம் அதிகமாக இருப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்தக் தகவலின் பேரில் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

இது தொடர்பாக கிடைத்த இன்னொரு ரகசிய தகவலின் அடிப்படையில் இன்று (சனிக்கிழமை) கொடுங்கையூர் திருவள்ளூர் நகர் 7-வது தெருவில் வசித்து வரும் சுலைமான் (22) என்பவரது வீட்டில் போலீஸார் சோதனை நடத்தினர். அப்போது அவரது வீட்டில் இருந்து அரை கிராம் மெத்தபெட்டமைன் எனும் போதை பொருள் கைப்பற்றப்பட்டது.

இதையடுத்து அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில், கொடுங்கையூர் விவேகானந்தர் தெருவைச் சேர்ந்த பாலாஜி ( 23) என்பவரை கைது செய்த போலீஸார், அவரிடமிருந்து 2 கிராம் மெத்தபெட்டமைன் போதைப் பொருளை பறிமுதல் செய்தனர்.

இவர்கள் இருவரும் வியாசர்பாடியில் சிலரிடம் போதைப் பொருட்களை வாங்கி அதனை கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீஸார் கைது செய்து, சிறையில் அடைத்தனர். மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள இருவரை போலீஸார் தேடி வருகின்றனர்.