மேட்டூர் - பாலமலையில் சாராய வேட்டை: சேலம், ஈரோடு காவலர்கள் கூட்டு நடவடிக்கை


மேட்டூர் அருகே பாலமலை வனப்பகுதியில் கள்ளச்சாரயம் வேட்டையில் ஈடுபட்டுள்ள இரு மாவட்ட போலீஸ் குழுவினர்.

மேட்டூர்: மேட்டூர் அருகே பாலமலையில் உள்ள கிராமங்கள் மற்றும் வனப்பகுதிகளில் சேலம், ஈரோடு மாவட்ட போலீஸார் இன்று கூட்டாக தீவிர சாராய வேட்டையில் ஈடுபட்டனர்.

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாரயம் அருந்தியதில் 200-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில் 63 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனையடுத்து மாநிலம் முழுவதும் தீவிர சாராய வேட்டையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி, சேலம் மாவட்ட எல்லையான மேட்டூரை அடுத்த கொளத்தூர், பாலமலை, கோவிந்தபாடி உள்ளிட்ட பகுதிகளில் கள்ளச்சாரயம் காய்ச்சி விற்பனை செய்வதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், மாவட்ட எஸ்பி-யான அருண் கபிலன் உத்தரவின் பேரில், போலீஸார் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், கருங்கல்லூர் பகுதியில் 40 லிட்டர் கள்ளச் சாரயம் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது.

இந்நிலையில், பாலமலை பகுதியில் உள்ள கிராமங்கள் மற்றும் அவற்றை ஒட்டிய வனப்பகுதியில் கள்ளச்சாரயம் உற்பத்தி செய்யப்படுவதாகவும், இந்தச் சாராயமானது கண்ணாமூச்சி வழியாக மேட்டூர், சேலம் பகுதியிலும், குருவரெட்டியூர் வழியாக ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை, அந்தியூர் பகுதிகளிலும் விற்பனை செய்யப்படுவதாகவும் தகவல்கள் பரவின.

இதையடுத்து, சேலம் மாவட்ட எஸ்பி-யான அருண் கபிலன், ஈரோடு மாவட்ட எஸ்பி-யான ஜவகர் ஆகியோர் உத்தரவின் பேரில் இரு மாவட்ட போலீஸார் இன்று இப்பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இதில், சேலம் மாவட்டம் கொளத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் தலைமையில் 16 பேரும், ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை காவல் ஆய்வாளர் தலைமையில் 8 பேரும் என் மொத்தமாக 24 பேர் சாராய வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்கள் பாலமலையில் உள்ள கிராமங்களை ஒட்டியுள்ள வனப்பகுதிக்குச் சென்று கள்ளச்சாரயம் காய்ச்சப்படுகிறதா சாராய ஊறல் போடப் பட்டுள்ளதா என சோதனையில் ஈடுபட்டனர். வனப்பகுதியில் உள்ள நீரோடை பகுதியிலும் போலீஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இன்று அதிகாலை முதல் நடைபெற்று வரும் இரண்டு மாவட்ட போலீஸாரின் கூட்டு சாராய வேட்டையானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.