மேற்பார்வையாளர் கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள்: செங்கை மகிளா நீதிமன்றம் உத்தரவு


மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் அருகே கீழ்நீர்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் லட்சுமிதாஸ். இவரது மனைவி தேசம்மாள் (40). இவர், தேசியஊரக 100 நாள் வேலை திட்டப் பணியின் மேற்பார்வையாளராக இருந்து வந்தார்.

மேலும், அதே பகுதியில் உள்ள தண்டரை கிராமம் கன்னியம்மன் கோயில் தெருவை சேர்ந்த சபாபதி (67) என்பவர், கடந்த 2016-ம் ஆண்டு தனது உறவினர்கள் 3 பேருடன், நூறு நாள் வேலை திட்டத்தில் வேலைக்கு வராமல், வேலைக்கு வந்தது போல் வருகை பதிவேட்டில் பதிவு செய்து ஊதியம் வழங்கவேண்டும் என ஆபாச வார்த்தைகள் பேசி, மேற்பார்வையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

ஆனால், இதற்கு தேசம்மாள் மறுத்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த சபாபதி மறைத்து வைத்திருந்த கத்தியை பயன்படுத்தி தேசம்மாளை குத்திவிட்டு தப்பி சென்றுள்ளார்.

இதில், பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுதொடர்பாக, தேசம்மாளின் அக்கா மகன் அருண்குமார் அளித்த புகாரின் பேரில் அணைக்கட்டு போலீஸார் வழக்கு பதிவு செய்து, சபாபதியை கைது செய்தனர்.

இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை, செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில்,அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞராக சசிரேகா ஆஜரானார்.

இந்நிலையில், மேற்கண்ட சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையை நிறைவு செய்து நேற்று மகிளா நீதிமன்ற நீதிபதி எழிலரசி, சபாபதிக்கு ஆயுள் தண்டனை, ரூ. 7,500 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார். இதையடுத்து, இவர் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

x