திருச்சியில் குற்றச் சம்பவங்கள் அதிகரிப்பு: 90 போலீஸாருக்கு மெமோ வழங்கி நடவடிக்கை


ஆணையர் என்.காமினி

திருச்சி: திருச்சி மாநகரில் கடந்த 23-ம் தேதி இரவு 3-க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்ற செல்போன் பறிப்பு, சங்கிலி பறிப்பு சம்பவங்களை அடுத்து, அன்று பணியிலிருந்த சுமார் 90 போலீஸாருக்கு திருச்சி மாநகர போலீஸ் ஆணையர் என்.காமினி எச்சரிக்கை மெமோ அளித்து நடவடிக்கை எடுத்துள்ளார்.

திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் கட்டுப்பாட்டின் கீழ் 14 காவல் நிலையங்கள் உள்ளன. திருச்சி மாநகரில் குற்றங்கள், திருட்டு, கொள்ளை சம்பவங்களை தடுக்க மாநகர போலீஸ் ஆணையர் என்.காமினி பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். ஆனால் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா, போதை மாத்திரை, லாட்டரிச் சீட்டு, புகையிலை பொருட்கள் ஆகியவற்றின் விற்பனையும், புழக்கமும் சமீப காலங்களாக அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

போதை பழக்கத்துக்கு ஆளாகும் சிறார்களை, சமூக விரோதிகள் தவறாக வழிநடத்தி வருகின்றனர். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் செல்போன், சங்கிலி பறிப்பு, வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டதாக சிறார்கள் அதிகளவு கைது செய்யப்பட்டு சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் சேர்க்கப் பட்டுள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சில ஆண்டுகளுக்கு முன்பு எங்காவது ஒரு இடத்தில் தான் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தார்கள், சங்கிலி பறித்தார்கள் என்ற செய்தி வந்தது.

தற்போது பெரும்பாலான இடங்களில் கத்தியை காட்டி மிரட்டியும், கட்டை, இரும்பு ராடால் தாக்கியும் சர்வசாதாரணமாக இதுபோன்ற திருட்டு சம்பவங்களில் இளைஞர்களும், சிறார்களும் ஈடுபடுவதாக புகார்கள் எழுந்துள்ளது. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தால் தமிழக அரசு மீது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ள நிலையில், திருச்சியில் பெருகி வரும் கஞ்சா, போதை மாத்திரை புழக்கமும், அதன் தொடர்ச்சியாக நடக்கும் வழிப்பறி சம்பவங்களும் போலீஸார் மீது பொதுமக்களுக்கு நல்ல அபிப்ராயம் ஏற்படவில்லை என்ற நிலை உள்ளது. இந்நிலையில், கடந்த 23-ந் தேதி இரவு திருச்சி மாநகரில் பல்வேறு வழிப்பறி சம்பவங்கள், சங்கிலி பறிப்பு, செல்போன் பறிப்பு சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறின.

அன்றைய தினம் மாநகரம் முழுவதும் ஆய்வாளர்கள், காவலர்கள் என சுமார் 90 பேர் இரவு நேர ரோந்து மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அதையும் மீறி இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு சிறுவர்கள், ஒரு வாலிபர் என மூன்று பேர் மாநகரத்தின் பல்வேறு பகுதிகளில் செல்போன், சங்கிலி பறிப்பு, வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர். போலீஸார் முறையாக ரோந்து செல்லவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, திருச்சி மாநகர போலீஸ் ஆணையர் என்.காமினி, ஜூன் 23ம் தேதி இரவு பணியிலிருந்த 90 போலீஸாருக்கு எச்சரிக்கை மெமோ வழங்கி நடவடிக்கை எடுத்துள்ளார்.

இது குறித்து போலீஸார் கூறியது: "கடந்த 23-ம் தேதி பணியிலிருந்த போலீஸார் கவனக்குறைவாக இருந்ததாகவும், சரியாக ரோந்து செல்ல வில்லை என்றும் புகார்கள் வந்ததை அடுத்து காவல் ஆணையர், அன்று பணியிலிருந்த போலீஸாருக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் மெமோ அளித்துள்ளார். பணியில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எதிர்காலத்திலும் இது தொடர்ந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கும் வகையில் இந்த மெமோ வழங்கப்பட்டுள்ளது" என போலீஸார் கூறினர்.