வீட்டு ஏ.சி-க்கு திருட்டு மின்சாரம்: இருவரிடம் ரூ.1.72 லட்சம் அபராதம் வசூல் @ திருச்சி


பிரதிநிதித்துவப் படம்

திருச்சி: வீட்டில் "ஏசி"க்காக மின் கம்பத்தில் கொக்கி போட்டு மின்சாரம் திருடிய ஊராட்சி செயலாளர் மனைவி உள்ளிட்ட இருவருக்கு மின்வாரிய அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் ரூ.1.72 லட்சம் அபராதம் விதித்து வசூலித்தனர்.

திருச்சி மாவட்டம் திருவானைக்காவல் அருகே உத்தமர்சீலி பகுதியில் சிலர் வீடுகளுக்கு பயன்படுத்தும் "ஏசி"க்கு மின்கம்பியில் கொக்கி போட்டு திருட்டு மின்சாரம் எடுப்பதாக மின்வாரிய அமலாக்கப்பிரிவு மற்றும் விழிப்புப்பணி குழுமத்துக்கு புகார்கள் சென்றது. இதையடுத்து, மின்வாரிய அமலாக்கப் பிரிவு மண்டல உதவி செயற்பொறியாளர் கொண்டல் ராஜ் மேற்பார்வையில், திருச்சி அமலாக்கப்பிரிவு உதவி செயற்பொறியாளர் மணிராஜ், ஸ்ரீரங்கம் மின்வாரிய அலுவலக உதவி செயற்பொறியாளர் வெங்கடேஷன் ஆகியோர் அப்பகுதியில் நேற்று முன்தினம் மாலை மின்திருட்டுத் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, உத்தமர்சீலி வடக்குத் தெருவைச் சேர்ந்த ஊராட்சி செயலாள்ர ராஜகோபால் மனைவி பாக்கியலட்சுமி என்பவரது மின்இணைப்புதாரர் வீட்டிலும், அதே பகுதியைச் சேர்ந்த பசுபதி மனைவி இளவரசி என்பரவது வீட்டிலும் ஏ.சி-க்காக அருகில் உள்ள மின் கம்பியில் கொக்கி போட்டு மின்சாரம் திருடியது தெரியவந்தது. இதையடுத்து, பாக்கியலட்சுமிக்கு ரூ.74,690, இளவரசிக்கு ரூ.89,628 என அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும், காவல் துறை குற்றவியல் நடவடிக்கையை தவிர்க்க உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்றங்களுக்கான சமரசத் தொகை தலா ரூ.4,000 வீதம் ரூ.8,000 வசூலிக்கப்பட்டது. இவரிடமிருந்தும் மொத்தம் ரூ.1,72,318 அபராதம், சமரசத் தொகை வசூலிக்கப்பட்டது.

‘ஏசி’க்காக மின் திருட்டில் ஈடுபட்டவர்களுக்கு அபராதத் தொகையால் வியர்த்துக் கொட்டியது. மேலும், மின் திருட்டுத் தொடர்பாக புகார்கள் தெரிவிக்க அமலாக்கப்பிரிவு 17 மாவட்டங்களை உள்ளடக்கிய திருச்சி கோட்ட செயற்பொறியாளர் 9443329851 மற்றும் உதவி செயற்பொறியாளர் (திருச்சி, கரூர், பெரம்பலூர்) 9443153111 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளும்படி மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.