நீதிமன்ற விசாரணைக்கு சென்று திரும்பிய மதுரை மத்திய சிறை கைதியிடம் இருந்து கஞ்சா பறிமுதல்


பிரதிநிதித்துவப் படம்

மதுரை: விசாரணைக்காக நீதிமன்றத்துக்குச் சென்றுவிட்டு வந்த மதுரை மத்திய சிறை கைதியிடம் இருந்து 7 கிராம் கஞ்சாவை சிறைக் காவலர்கள் சோதனையின் போது கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.

மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள விசாரணை கைதிகளை அவ்வப்போது, வழக்கின் தன்மையைப் பொறுத்து, நீதிமன்றங்களில் நேரில் ஆஜர்ப்படுத்த காவல்துறையினர் அழைத்துச் செல்வது வழக்கம். இதன்படி, வெளியில் அழைத்து சென்று விட்டு மீண்டும் சிறைக்கு திரும்பும்போது, தடை செய்யப்பட்ட பொருட்கள் மறைத்து எடுத்து வருகிறார்களா என கைதிகளிடம் ஆய்வு செய்யப்படும்.

இந்நிலையில், மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள தாராபுரம் பகுதியைச் சேர்ந்த விசாரணை கைதியான திவாகரன் (44) என்பவர் வழக்கு ஒன்று தொடர்பாக தாராபுரம் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். மீண்டும் அவரை மதுரை சிறைக்கு அழைத்து வந்தபோது, அவரை சிறைக் காவலர்கள் சோதனையிட்டனர். அப்போது அவர் சுமார் 7 கிராம் கஞ்சாவை ஆடைக்குள் மறைத்து கொண்டு வந்தது தெரிந்து, பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக கரிமேடு போலீஸார் விசாரிக்கின்றனர்.