பல்லடம்: சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த உறவினருக்கு 20 ஆண்டு சிறை


பிரதிநிதித்துவப் படம்

திருப்பூர்: சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த, பல்லடத்தைச் சேர்ந்த அக்காவின் கணவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பல்லடத்தைச் சேர்ந்த 26 வயது இளைஞர் திருமணம் முடித்து தனது மனைவியுடன் குடும்பம் நடத்தி வந்தார். இந்த நிலையில், இவர் மாமியார் வீட்டுக்கு போக வர இருந்த சமயத்தில் தனது மனைவியின் தங்கையான 15 வயது சிறுமிக்கு ஆசை வார்த்தை கூறி அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். வெளியில் சொன்னால் அக்காவின் வாழ்க்கை பறிபோய்விடும் என்று மிரட்டியே அந்த இளைஞர் அந்தச் சிறுமியை பலமுறை பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.

இதெல்லாம் நடந்தது 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில். ஒரு கட்டத்தில் அந்தச் சிறுமி தனது தாயாரிடம் அனைத்து விஷயத்தையும் கூறி கதறி அழுதுள்ளார். இது குறித்து பல்லடம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து அந்த இளைஞரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இது தொடர்பான வழக்கு திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நீதிபதி ஸ்ரீதர் வழங்கிய தீர்ப்பில், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 20 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையுடன் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். இதையடுத்து அந்த இளைஞர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.