கள்ளச் சாராயம்: புதுச்சேரி ஜிப்மரில் ஒரே நாளில் இருவர் உயிரிழப்பு


புதுச்சேரி: கள்ளச் சாராயம் குடித்து புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றோரில் ஒரே நாளில் 2 பேர் உயிரிழந்ததால் இறந்தவர்கள் எண்ணிக்கை ஐந்தாக அதிகரித்துள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷ சாராயம் அருந்தி உடல்நலம் பாதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 20 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் 3 பேர் உயிரிழந்திருந்தனர். இந்நிலையில் 6 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். மேலும் 11 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை ஏசுதாஸ் (35) என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து, ராமநாதன் வயது 62, என்பவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இன்று ஒரே நாளில் 2 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் இதுவரை புதுச்சேரி ஜிப்மரில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது ஜிப்மர் மருத்துவ மனையில் 9 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் சிலர் நிலை கவலைக் கிடமாகவுள்ளது. தொடர்ந்து சிகிச்சை தரப்பட்டு வருகிறது. பலருக்கும் செயற்கை சுவாசமும், டயாலிசிஸும் செய்யப்படுகிறது.