வீட்டிற்குள்ளேயே கொல்லப்பட்ட 5 பேர்: உயிர் தப்பிய அதிசய குழந்தை!


உத்தரப் பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சிறுமி உள்பட 5 பேர் தலையில் கூரிய ஆயுதத்தால் அடித்துப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் கேவ்ராஜ்பூர் கிராமம் உள்ளது. இங்கு ஒரு வீடு தீப்பிடித்து எரிவதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. அங்கு அவர்கள் சென்ற போது எரிந்த வீட்டில் ராஜ்குமார் யாதவ் (55), அவரது மனைவி குசும்தேவி (52), மகள் மனிஷா (25), மருமகள் சவீதா (30) மற்றும் ராஜ்குமாரின் பேத்தி மீனாட்சி (2) ஆகியோர் கொலை செய்யப்பட்டு கிடந்தனர். இவர்கள் அனைவரும் தலையில் கூரிய ஆயுதத்தால் அடித்து கொலை செய்யப்பட்டது போலீஸாரின் விசாரணையில் தெரிய வந்தது.

இவர்களைக் கொன்றவர்கள் வீட்டிற்கு நெருப்பு வைத்துள்ளனர். இந்த கொடூர கொலையில் இருந்து சாக்ஸி(5) என்ற ராம்குமாரின் பேத்தி உயிர் தப்பியுள்ளார். அவரிடம் சம்பவம் எப்படி நடைபெற்றது என்று போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த 15-ம் தேதி பிரயாக்ராஜ் மாவட்டத்தில் ககல்பூர் கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் இதே போல கூரிய ஆயுதங்களால் கொலை செய்யப்பட்டிருந்தனர். அந்த குடும்பத்தின் தலைவர் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். தற்போது அதே ஸ்டைலில், கேவ்ராஜ்பூர் கிராமத்தில் ஐந்து பேர் கூரிய ஆயுத்தால் தலையில் அடித்துக் கொல்லப்பட்டுள்ளது உத்தரப் பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

x