அமைச்சர் பெயரில் போலி கடிதம்: தமிழக பாஜக நிர்வாகிக்கு நிபந்தனை ஜாமீன்!


உணவுத்துறை அமைச்சர் பெயரில் போலி கடிதத்தை சமூக வலைதளங்களில் பரப்பியதாக தொடரப்பட்ட வழக்கில் தமிழக பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில தலைவர் நிர்மல் குமாருக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொங்கல் பரிசு தொகுப்பாக தமிழக அரசு தரமற்ற பொருட்களை வினியோகம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில், இதற்கு, தமிழக உணவுத் துறை அமைச்சர் அர.சக்கரபாணி விளக்கம் அளித்து இருப்பது போல, சமூக வலைதளத்தில் கடிதம் பரவியது. இந்த கடிதம் போலியாக தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், இதனை பாஜக தகவல் நுட்பம் மற்றும் சமூக வலைதள தொடர்பு பிரிவு தலைவர் நிர்மல்குமார், சமூக வலைதளத்தில் வெளியிட்டதாக புகார் எழுந்தது.

இதுகுறித்து, சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீஸார் விசாரித்து, நிர்மல்குமார் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இந்த விவகாரம் தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் முன்பு ஆஜரான நிர்மல் குமாரிடம் ஏப்ரல் 8-ம் தேதி விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் இந்த வழக்கில் முன் ஜாமீன் வழங்கக்கோரி நிர்மல் குமார், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அதில்,” இந்த பதிவு தம்மால் உருவாக்கப்படவில்லை எனவும், தமக்கு வந்ததை சமூக வலைதளத்தில் பகிர்ந்து பதிவிட்டதாகவும்” தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்ற உத்தரவுப்படி கடந்த 8-ம் தேதி காவல்துறை முன்பு விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளித்துள்ளதாக நிர்மல் குமார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, “ சர்ச்சைக்குரிய அந்த பதிவை நீக்க வேண்டுமெனவும், தேவைப்படும் போது காவல்துறை விசாரணைக்கு ஆஜராக வேண்டும். 25 ஆயிரம் ரூபாய்க்கான இரு நபர் உத்தரவாதம் அளிக்க வேண்டும்” என்ற நிபந்தனைகளுடன் நிர்மல் குமாருக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

x