எம்எல்ஏ நேரடி கள ஆய்வு: சாராயத்தை பறிமுதல் செய்த புதுவை போலீஸார்!


புதுச்சேரி: தனக்கு கிடைத்த தகவல்படி தனது தொகுதியில் வீடு, மளிகை கடையில் விற்ற சாராயத்தை, எல்எல்ஏ ஆய்வில் போலீஸார் பறிமுதல் செய்தனர். இது கள்ளச் சாராயம் என எம்எல்ஏ சம்பத் புகார் தெரிவித்தார். இதையடுத்து, கலால் துறை சோதனை நடந்து வருகிறது.

கள்ளக்குறிச்சி சம்பவத்தைத் தொடர்ந்து புதுச்சேரியில் சோதனைப் பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று முதலியார்பேட்டை எம்எல்ஏ சம்பத்துக்கு வீடியோ பதிவு செல்போனில் வந்தது. அதில் வீடு, கடைகளில் கள்ளச் சாராயம் விற்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து முதலியார்பேட்டை காவல் நிலையத்தில் சாலைப் பணிகளை ஆய்வு செய்வதாகக் குறிப்பிட்டு போலீஸாருடன் முதலியார்பேட்டை வேல்ராம்பட்டு ஏரிக்கு செல்லும் மாரியம்மன் கோயில் தெருவுக்கு சென்றார்.

அங்கு ஒரு வீட்டையொட்டிய பகுதியில் மூட்டையில் சாராய பாக்கெட்டுகள் இருந்தன. அதை போலீஸார் பறிமுதல் செய்தனர். மேலும், சாராயம் அருந்தும் இடமும் அங்கு இருந்தது. அடுத்து அருகேயிருந்த மளிக்கைக் கடையில் பாட்டில் சாராயம், அருகேயிருந்த வீட்டில் சாராய பாக்கெட்டுகள் இருந்தன. அவற்றையும் எம்எல்ஏ முன்னிலையில் போலீஸார் பறிமுதல் செய்தனர். அங்கிருந்த சக்கரவர்த்தியை போலீஸார் பிடித்தனர். மேலும் கடைக்கு வெளியே இருந்த டூவீலரின் இருக்கைப் பகுதியை தூக்கி பார்த்தால் அங்கு சாராய பாட்டில்கள் இருந்தன.

புதுச்சேரியில் சாராயக் கடைகள் உள்ள நிலையில் வீடு, கடைகளில் சாராயம் பிடிப்பட்டது தொடர்பாக எம்எல்ஏ சம்பத் கூறுகையில், “அரசு அனுமதியின்றி திருட்டுத்தனமாக விற்றால் அது கள்ள சாராயம்தான். கடையில் இருந்து வாங்கி வந்திருந்தாலும் அதில் என்ன கலந்திருக்கும் என்று தெரியாது" என்றார். அதைத் தொடர்ந்து அப்பகுதியில் கலால் துறை, போலீஸார் சோதனை செய்து வருகின்றனர்.