கரூர்: தவுட்டுப்பாளையம் காவிரி ஆற்றில் மூழ்கி இரு இளைஞர்கள் உயிரிழப்பு


கரூர்: கரூர் அருகே தவுட்டுப்பாளையம் காவிரி ஆற்றில் மூழ்கி இரு இளைஞர்கள் உயிரிழந்தனர். வேலாயுதம்பாளையம் தீயணைப்பு வீரர்கள் இருவரின் சடலங்களை மீட்டனர். வேலாயுதம்பாளையம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் (24). கரூர் அருகேயுள்ள ஆத்தூரில் உள்ள ஜவுளி ஏற்றுமதி நிறுவனத்தில் தங்கி வேலை பார்த்து வருகிறார். கொடைக்கானலை சேர்ந்தவர்கள் மணிகண்டன் (24), பாலமுருகன் (24) இருவரும் ஓட்டுநர்கள். கார்த்திக்கின் நண்பர்களான இருவரும் கார்த்திக்கை பார்ப்பதற்காக கரூர் வந்துள்ளனர்.

விடுமுறை நாள் என்பதால் மூவரும் குளிப்பதற்காக வேலாயுதம்பாளையம் அருகேயுள்ள த வுட்டுப்பாளையம் காவிரி ஆற்றிற்கு நேற்று (ஜூன் 23ம் தேதி) சென்றுள்ளனர். மணிகண்டன், பாலமுருகன் இருவரும் ஆற்றில் முதலில் இறங்கியுள்ளனர். இருவரும் ஆழமான பகுதிக்கு செ ன்று நீரில் இழுத்து செல்லப்பட்டு ஆற்று நீரில் மூழ்கியுள்ளனர்.

இதையடுத்து வேலாயுதம்பாளையம் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். இதையடுத்து அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக ஆற்றில் தேடி மணிகண்டன், பாலமுருகன் இருவரையும் சடலங்களாக மீட்டனர். வேலாயுதம்பாளையம் போலீஸார் வழக்கு பதிவு செய்து இருவரின் சடலங்களை கைப்பற்றி கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.